×

கலைவாணர் அரங்கத்தில் முதன்முதலாக தொடங்கிய சட்டப்பேரவை ஒத்திவைப்பு: 23 எம்எல்ஏக்கள் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்.!!!

சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தொடங்கிய சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது. சட்டப்பேரவை விதிகளின் படி ஆண்டுக்கு 2 முறை, 6 மாத இடைவெளியில் கூட்டம் நடத்தப்பட வேண்டும். வழக்கமாக பிப்ரவரியில் நிதிநிலை அறிக்கை தாக்கல் மற்றும் மே, ஜூன் மாதங்களில் மானியக்கோரிக்கை விவாதம் நடத்தப்படும். அதன்பிறகு 6 மாதங்களுக்கு பிறகு ஜனவரியில் ஆளுநர் உரை நிகழ்த்துவார். ஆனால், கொரோனா தொற்று காரணமாக சட்டப்பேரவை கூட்டம் கடந்த மார்ச் 24ம் தேதியுடன் அவசரமாக முடித்து கொள்ளப்பட்டது.

இதனால், விரைவில் இந்த மாதம் 24ம் தேதிக்குள் சட்டப்பேரவை கூட்டம் நடத்த வேண்டும். ஆனால், தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவையில் சமூக இடைவெளியை கடைபிடித்து கூட்டம் நடத்துவதற்கு போதிய வசதிகள் இல்லை. எனவே, சென்னை சேப்பாக்கம் வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் சட்டப்பேரவை கூட்டம் முதன்முதலாக நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி, தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. முதல்நாளான இன்று முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கன்னியாகுமரி தொகுதி எம்பி எச்.வசந்தகுமார் மற்றும் திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உள்ளிட்ட 23 எம்எல்ஏக்கள் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, சட்டமன்ற கூட்டத்தொடரை நாளை காலை 10 மணிக்கு சபாநாயகர் தனபால் ஒத்திவைத்தார். நாளைய தினம், நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் துணை நிலை அறிக்கை தாக்கல் செய்கிறார். தொடர்ந்து, 16ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் கேள்வி நேரம் உள்ளது. இந்த கூட்டத்தில், திமுக சார்பில் 20க்கும் மேற்பட்ட பிரச்னைகள் குறித்து பேச கவனஈர்ப்பு தீர்மானம் சபாநாயகர் தனபாலிடம் அளிக்கப்பட்டுள்ளது. நாளை தொடங்கும் சட்டபேரவையில் காரசார விவாதங்கள் இடம்பெறும் எதிர்பார்க்கப்படுகிறது.

BAN NEET என முகக்கவசம்:

இதற்கிடையே, நீட் தேர்வு தொடர்பாக மாணவர்கள் தற்கொலையானது தமிழகத்தில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று மட்டும் சுமார் 3 மாணவர்கள் நீட் தேர்வு காரணமாக மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்றைய தினம் எதிர்க்கட்சி எம்.எல்ஏக்கள், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், தமிழக மாணவர்களை காக்க வேண்டும் என தெரிவித்து (BAN NEET)  என முகக்கவசமும் அணிந்து சட்டமன்ற கூட்டதொடரில் பங்கேற்றுள்ளனர். முன்னதாக, திமுக எம்.எல்.ஏ-க்கள்  BAN NEET என முகக்கவசத்தை அணிந்து கலைவாணர் அரங்கிற்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : session ,Legislative Assembly ,death , Postponement of the first session of the Legislative Assembly at Kalaivanar Arena: Resolution of condolence for the death of 23 MLAs passed !!!
× RELATED பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில்...