குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்: ஆட்டோ டிரைவர் கைது மேலும் 2 பேருக்கு வலை

தண்டையார்பேட்டை: கொடுங்கையூர் குப்பைமேடு பகுதியில் நேற்று முன்தினம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியே வந்த ஒரு ஆட்டோவை மடக்கி சோதனை செய்தனர். அதில், குட்கா, ஹான்ஸ் மற்றும் போதை பாக்குகள் இருப்பது தெரிந்தது. இதையடுத்து, ஆட்டோ டிரைவரான வியாசர்பாடி கல்யாணபுரத்தை சேர்ந்த வினோத் குமாரை (36) பிடித்து  விசாரித்தபோது, சவுகார்பேட்டை கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் அலுவலகம் நடத்தி வரும் அஞ்சுபாபு (36), பார்த்திபன் (40) ஆகியோர் பெங்களூருவில் இருந்து குட்கா, ஹான்ஸ், மாவா போன்ற போதை பொருட்களை கடத்தி வந்து, கொடுங்கையூர் விவேகானந்தா நகர் 2வது தெருவில் உள்ள குடோனில் பதுக்கி வைத்து, சென்னை முழுவதும் விற்பனை செய்தது தெரியவந்தது.

இவர்கள் குறிப்பிடும் கடைகளுக்கு வினோத்குமார் தனது ஆட்டோவில் போதை பாக்குகளை சப்ளை  செய்து வந்ததும் தெரிந்தது. இதையடுத்து, போலீசார் கொடுங்கையூரில் உள்ள அந்த வீட்டை திறந்து சோதனை செய்தபோது, அங்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள 8 டன் குட்கா மற்றும் போதை பாக்குகள் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, ஆட்டோ டிரைவர் வினோத்குமாரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகள் அஞ்சு பாபு, பார்த்திபனை தேடி வருகின்றனர்.

Related Stories:

>