×

எனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது’ மகாராஷ்டிர கவர்னரிடம் நடிகை கங்கனா முறையீடு: கங்கனாவின் வீடியோவால் பரபரப்பு

மும்பை: மும்பையில் தனது பங்களாவின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது தொடர்பாக, மகாராஷ்டிரா கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து நடிகை கங்கனா ரனாவத் முறையிட்டுள்ளார். நடிகர் சுஷாந்த் மரணத்தில் போதை பொருள் மாபியாவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டிய நடிகை கங்கனா ரனாவத், மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு பேசினார். இதற்கு சிவசேனா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து அவர் மும்பை வந்தால் தாக்குவோம் என மிரட்டல் விடுத்தனர். அதையும் மீறி மும்பை வந்த நிலையில், விதிமுறைகளை மீறி பாந்த்ராவில் உள்ள அவரது பங்களாவின் ஒரு பகுதியை மும்பை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து தள்ளினர்.

உயர் நீதிமன்றம் தடை விதித்ததை தொடர்ந்து, இடிப்பு பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மகாராஷ்டிரா கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை மும்பை ராஜ்பவனில் கங்கனா நேற்று சந்தித்து பேசினார். அப்போது, தனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அவரிடம் முறையிட்டார். இந்த சந்திப்புக்கு பிறகு ராஜ்பவன் வெளியே கங்கனா அளித்த பேட்டியில், ‘‘எனது பங்களா இடிக்கப்பட்டது தொடர்பாக கவர்னரை சந்தித்து பேசினேன். அவர் என்னை தனது மகள் போல் கருதி, எனது குறைகளை  கேட்டறிந்தார். இந்திய குடிமகளாக தான் கவர்னரை சந்தித்து பேசினேன். இதில், அரசியல் எதுவும் இல்லை. எனக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிக்கு விரைவில் நீதி  கிடைக்கும் என நம்புகிறேன்,’’ என்றார்.

* நான் போதைக்கு அடிமையாக இருந்தேன்
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தில் பாலிவுட் திரையுலகினர் பலருக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர்களை மகாராஷ்டிரா அரசு காப்பாற்ற முயற்சி செய்வதாகவும் குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார் கங்கனா ரனவத். மேலும் மும்பை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல் இருப்பதாகவும் விமர்சித்து இருந்தார். இதற்கிடையே கங்கனாவுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியது. அவர் கடந்த 9ம் தேதி மும்பைக்கு வந்தபோது, விதிமுறை மீறி கட்டப்பட்டதாக கூறி அவரது அலுவலகத்தின் ஒரு பகுதியை மும்பை மாநகராட்சி இடித்தது.

இந்நிலையில் கங்கனா போதை பொருள் பயன்படுத்தியதாக புகார் உள்ளது எனக் கூறி அவர் மீது வழக்கு தொடர சிவசேனா எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர். சில ஆண்டுகளுக்கு முன், நடிகர் அத்யாயன் சுமன், கங்கனா போதை மருந்து  பயன்படுத்தியதாகவும் தன்னையும் போதை மருந்து பயன்படுத்த வற்புறுத்தியதாகவும் புகார் கூறியிருந்தார். இதன் பேரில் விசாரணை நடத்த மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில், ‘நான் போதைக்கு அடிமையாக இருந்தேன்’ என கங்கனா பேட்டியளிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Kangana ,Governor ,Maharashtra , Actress Kangana appeals to Governor of Maharashtra for injustice, video of Kangana, sensationalism
× RELATED நான் மாட்டிறைச்சி அல்லது வேறு எந்த...