×

ஊரடங்கு தளர்வு எதிரொலி பெரியபாளையம் பவானியம்மன் கோயிலில் பக்தர்களால் நெரிசல்: போக்குவரத்து பாதிப்பு

ஊத்துக்கோட்டை: பெரியபாளையத்தில் புகழ்பெற்ற ஸ்ரீபவானி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் ஆடித்திருவிழா ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் 16 அல்லது 17ம் தேதி தொடங்கும். இந்த விழா 10 வாரங்கள் நடைபெறும்.
இத்திருவிழாவிற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா  என பல்வேறு பகுதிகளில் இருந்து கார், பஸ், வேன், ஜீப், லாரி, ஆட்டோ, மாட்டு வண்டி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பக்தர்கள் வருவது வழக்கம். அவ்வாறு வரும் பக்தர்கள் சனிக்கிழமை இரவு தங்கி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை பொங்கல் வைத்து, ஆடு, கோழிகளை பலியிட்டு தங்கள் நேர்த்தி கடனை செலுத்துவர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கோயில் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் கொரோனா பிரச்னை காரணமாக உபயதாரர்கள், பக்தர்கள் யாருக்கும் கோயிலில் அனுமதி இல்லை என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்திருந்தனர். மேலும், கோயிலை சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் ஆடி மாத வெள்ளிக்கிழமை பாதயாத்திரையாக கோயிலுக்கு வந்த பக்தர்களை கூட அனுமதிக்காமல் போலிசார் திருப்பி அனுப்பினர். கடந்த 1ம் தேதி முதல் கோயில்கள் அனைத்தும் திறக்கப்பட்டது. தொடர்ந்து 7ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு பஸ் போக்குவரத்து தொடங்கியதால் ஆவணி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று பெரியபாளையத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.

கூட்டம் அதிகமாக இருந்தாலும் சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பெரியபாளையம் பகுயில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெரியபாளையத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமானதால் ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாரதி தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியிலும், போக்குவரத்தை சீரமைக்கும் பணியிலும் ஈடுபட்டனர். மேலும், ஆந்திராவில் இருந்து சென்னைக்கு செல்லும் கனரக வாகனங்களை ஊத்துக்கோட்டையிலேயே மடக்கி திருவள்ளூர் மற்றும் சத்தியவேடு வழியாக அனுப்பினர்.

Tags : devotees ,Periyapalayam Bhavaniyamman Temple , Curfew relaxation, Periyapalayam Bhavaniyamman temple, congestion by devotees, traffic jams
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...