×

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இன்று நாடாளுமன்ற மழைக்கால தொடர் துவக்கம்: ஆளும் கட்சியை தெறிக்கவிட எதிர்க்கட்சிகள் தயார்நிலை

புதுடெல்லி: நாட்டில் கொரோனா அச்சுறுத்தல், சீனாவுடன் எல்லையில் மோதல், பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சி போன்ற பிரச்னைகள் இருக்கும், பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இதில், பிரதமர் மோடி அவைக்கு வந்து பதில் சொல்ல வேண்டும் என்ற கோஷத்துடன், இந்த கூட்டத் தொடரை எதிர்க்கட்சிகள் சந்திக்க உள்ளன. இதில், அனல் பறக்கும் என்று தெரிகிறது. கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக நாடு தழுவிய ஊரடங்கை பிரதமர் மோடி கடந்த மார்ச்சில் அறிவித்தார். இதற்கு ஒருநாள் முன்னதாகதான், தேதி குறிப்பிடப்படாமல் நாடாளுமன்றம் கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், கொரோனா பரவல் அச்சுறுத்தலுக்கு இடையே நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. அக்டோபர் 1ம் தேதி வரையில் தொடர்ந்து 18 நாட்களுக்கு விடுமுறை எதுவுமின்றி, இத்தொடர் நடைபெற உள்ளது. இதில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, இந்நோய் தொற்றுக்கான அனைத்து வழிகாட்டு நெறிமுறைகள் முழுமையாக பின்பற்றப்பட உள்ளன. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை, சீனாவுடன் ஏற்பட்டுள்ள எல்லை மோதல், பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சி, வேலை வாய்ப்புகள் இழப்பு, ஜிஎஸ்டி,யில் மாநில பங்குகளை வழங்காதது உட்பட பல்வேறு பிரச்னைகளில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

இப்பிரச்னைகளை கிளப்புவதற்கான ஒரு வாய்ப்பாக எதிர்க்கட்சிகளுக்கு  இந்த கூட்டத் தொடர் கிடைத்துள்ளது. இதை முழுமையாக பயன்படுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இப்பிரச்னைகளை கிளப்பும் போது ஒன்றிணைந்து செயல்படலாம் என அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் அது அழைப்பும் விடுத்துள்ளது. இதன் காரணமாக, கொரோனா பீதிக்கு இடையே இத்தொடர் நடந்தாலும், அதில் அமளிக்கு பஞ்சம் இருக்காது என்று கருதப்படுகிறது. இத்தொடரில் 23 முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அவற்றில் 10 மசோதாக்கள், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அவசர சட்டங்களை சட்டமாக மாற்றுவதற்கானவை. இத்தொடரை அமைதியாக நடத்த ஒத்துழைப்பு அளிக்கும்படி அனைத்து கட்சி தலைவர்களுக்கும், மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவும், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஒவ்வொரு முறையும் நாடாளுமன்ற தொடர் கூடுவதற்கு முன்பாக, அனைத்து நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுடன் இவர்கள் இருவரும் தனித்தனியாக ஆலோசனை நடத்துவது வழக்கம். இம்முறை இது அனைத்து கட்சி கூட்டமாக நடத்தப்படாமல், நாடாளுமன்ற அலுவல் ஆலோசனைக் கூட்டமாக நடத்தப்பட்டது. இந்த கூட்டத் தொடர் பிரச்னைகளுக்கு பஞ்சம் இல்லாத சூழ்நிலையில் கூடுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் கடுமையான விவாதத்தில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இதை எதிர்கொள்வது ஆளும் கட்சிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என கருதப்படுகிறது.

* விவாதம் நடத்த அனுமதி எதிர்க்கட்சிகள் கோரிக்கை
நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று தொடங்குவதை முன்னிட்டு, மக்களவை அலுவல் ஆலோசனை குழுவின் கூட்டத்தை சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று கூட்டினார். இதில், நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது, கூட்டத் தொடரில் விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும் என திமுக சார்பில் பங்கேற்ற டி.ஆர்.பாலு உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர். கூட்டத்துக்குப் பிறகு டி.ஆர்.பாலு அளித்த பேட்டியில், ‘‘சீனாவுடன் ஏற்பட்டுள்ள எல்லை பிரச்னை, வேலைவாய்ப்புகள் இழப்பு, பொருளாதார மந்தநிலை, ஜிஎஸ்டி, ஓபிசி இடஒதுக்கீடு உள்ளிட்ட பிரச்னைகள் பற்றி விவாதிக்க அனுமதிக்கும்படி சபாநாயகரிடம் வலியுறுத்தி உள்ளோம்,’’ என்றார்.

* பிரணாப்புக்கு அஞ்சலி
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக நாடாளுமன்ற தொடர் நடக்கவில்லை. பட்ஜெட் கூட்டத் தொடர் கூட பாதிலேயே கைவிடப்பட்டது. இன்று தொடங்கும் தொடரின் முதல் நாளில், சமீபத்தில் இறந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அஞ்சலி செலுத்திய பிறகு அவை ஒத்திவைக்கப்படும் என்று தெரிகிறது.

காலையில் மாநிலங்களவை மாலையில் மக்களவை... நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்கான சிறப்பு ஏற்பாடுகள்:-
* இன்று முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க இருப்பதால் எம்பி.க்கள், அலுவலர்கள், பத்திரிகையாளர்கள் உள்பட 4,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
* நாடாளுமன்ற வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. எங்குமே கைகளை பயன்படுத்துவதை தவிர்க்க, தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டு உள்ளன.
* தானியங்கி வெப்ப நிலை சோதனை, தானியங்கி ஸ்கேனிங் என பெரும்பாலான நடவடிக்கைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு உள்ளது.
* உறுப்பினர்கள் சமூக இடைவெளி விட்டு அமரும்படி இருக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
* முன் எப்போதும் இல்லாத வகையில், மக்களவை, மாநிலங்களவை வெவ்வேறு நேரங்களில் ‘ஷிப்ட்’ முறையில் செயல்பட உள்ளன.
* முதல் நாளான இன்று தவிர, இதர நாட்களில் மாநிலங்களவை காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும், மக்களவை பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நடைபெறும்.
* இரு அவைகளின் இருக்கைகள், பார்வையாளர் மாடங்களும் எம்பி.க்கள் சமூக இடைவெளியுடன் அமரும் வகையில் பயன்படுத்தப்பட உள்ளன.
* இரண்டு அவைகளின் கூட்டத்துக்கு இடையிலான 2 மணி நேர இடைவேளையில், அவையின் உட்புறமும், நாடாளுமன்ற வளாகமும் கிருமி நாசினியால் சுத்தப்படுத்தப்படும்.
* எம்பி.க்கள், தலைமை செயலக அலுவலர்கள், பத்திரிகையாளர்கள் கடந்த 72 மணி நேரத்துக்குள் எடுத்த கொரோனா சோதனை அறிக்கையை சமர்ப்பித்த பிறகே அவைக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
* நாடாளுமன்றத்தில் பயன்படுத்தப்பட உள்ள ஆவணங்கள், எம்பி.க்கள், அலுவலர்களின் காலணிகள், கார்கள் போன்றவற்றுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படும்.
* ஏர்கண்டிஷனரில் செலுத்தப்படும் காற்று தினமும் 6 முறை மாற்றப்படும்.
* நாடாளுமன்ற வளாகத்தின் 40 பகுதிகளில், தானியங்கி கிருமி நாசினி கருவிகள் வைக்கப்பட உள்ளன.
* உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் நேரிடையாக சந்திப்பத்தை தவிர்க்க, உள் நுழையவும், வெளியே செல்லவும் வெவ்வேறு வழிகள் அமைக்கப்பட்டுள்ளன.

* சோனியா, ராகுல் ஆப்சென்ட்
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைக்காக நேற்று முன்தினம் அமெரிக்கா சென்றார். அவருடன் ராகுல் காந்தியும் சென்றுள்ளார். எனவே, இன்று தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. இம்மாத இறுதியில் நாடு திரும்ப உள்ள இவர்கள், கடைசி ஓரிரு நாள் நடக்கும் கூட்டத்தில் மட்டுமே பங்கேற்பார்கள் என தெரிகிறது.

பாதுகாப்பு கிட்
கூட்டத் தொடரில் பங்கேற்கும் எம்பி.க்கள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட உள்ள கொரோனா தடுப்பு உபகரண பையில் (கிட்) இடம் பெறும் பொருட்கள் விவரம்:
* பயன்படுத்தி விட்டு வீசக்கூடிய 40 தற்காலிக முகக்கவசங்கள்
* 50 மிலி அளவு கொண்ட 20 கிருமி நாசினி பாட்டில்கள்
* 40 ஜோடி கையுறைகள்
* மூலிகை கிருமிநாசினி துடைப்பான்
* டீத்துாள் அடங்கிய உறைகள்
* இந்த கூட்டத்தொடரை முன்னிட்டு, இரு அவைகளையும் சேர்ந்த 785 எம்பி.க்களுக்கும். கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
* இவர்களில் 200 எம்பிக்கள் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
* இதுவரை 7 மத்திய அமைச்சர்கள், 20க்கும் மேற்பட்ட எம்பிக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு குணமாகி இருக்கிறது.

Tags : Corona ,Opposition parties ,season ,party , Corona threat, today, parliamentary rainy season series begins, opposition parties ready to overthrow ruling party
× RELATED கொரோனா அச்சுறுத்தல் குறையும்...