இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் சைக்கிளில் சென்ற 230 பேர் பலி; பெருநகரங்களில் சென்னை முதலிடம்

சென்னை: தமிழகத்தில் 2019ம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்துகளில் சைக்கிள் ஓட்டிச் சென்ற 230 பேர் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கார், பைக், லாரி, பஸ் விபத்துகளில் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் மேல் இருக்கும். ஆனால் சைக்கிளை மறந்துவிட்ட இந்த நவீன உலகில் கொரோனா தான் மீண்டும் மக்களுக்கு அதன் பயன்பாட்டை மீண்டும் நிகழ்காலத்துக்கு கொண்டு வந்துள்ளது. பலரும் உடற்பயிற்சிக்காகவும், அருகில் உள்ள இடங்களுக்கு ஷாப்பிங் செல்லவும் தற்போது பயன்படுத்த தொடங்கி உள்ளனர். சென்னையை பொறுத்தவரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சைக்கிள் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சைக்கிள் பாதைகள் பெரும்பாலும் முக்கிய சாலைகள் அருகிலேயே அமைக்கப்படுகிறது. இதனால் சைக்கிள் ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மாலை நேரங்களில் இந்த சாலைகளில் சைக்கிள் ஓட்ட முடியாத நிலை உள்ளது.

குறிப்பாக நகரின் முக்கிய சாலைகளில்  சைக்கிள் பாதைகள் அமைப்பதால் விபத்துகளில் சிக்கி சைக்கிள் ஓட்டிகள் மரணம் அடைவது அதிகரித்து கொண்டே வருகிறது. இதன்படி கடந்த 2019ம் ஆண்டு இந்தியா முழுவதும் சாலை விபத்துகளில் சிக்கி 1970 சைக்கிள் ஓட்டிகள் மரணம் அடைந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக தமிழகத்தில் 230 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக உத்தரபிரதேசத்தில் 216 பேரும், மகாராஷ்டிராவில் 162 பேரும், பீகாரில் 159 பேரும், பஞ்சாப்பில் 145 பேரும் மரணம் அடைந்துள்ளனர். பெருநகரங்களில் சென்னையில்தான் அதிகம் பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்படி சென்னையில் 43 சைக்கிள் ஓட்டிகள் மரணம் அடைந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக ஜாம்பூரில் 24 பேர், அசன்சோலில் 19 பேர், பரிதாபாத்தில் 17 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

Related Stories:

>