×

நீட் தற்கொலை, கொரோனா முறைகேடு போன்ற பரபரப்பான சூழ்நிலையில் சட்டப்பேரவை இன்று கூடுகிறது; கிசான் திட்ட ஊழல் உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சட்டப்பேரவை இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளது. சட்டப்பேரவை விதிகளின் படி ஆண்டுக்கு 2 முறை, 6 மாத இடைவெளியில் கூட்டம் நடத்தப்பட வேண்டும். வழக்கமாக பிப்ரவரியில் நிதிநிலை அறிக்கை தாக்கல் மற்றும் மே, ஜூன் மாதங்களில் மானியக்கோரிக்கை விவாதம் நடத்தப்படும். அதன்பிறகு 6 மாதங்களுக்கு பிறகு ஜனவரியில் ஆளுநர் உரை நிகழ்த்துவார். ஆனால், கொரோனா தொற்று காரணமாக சட்டப்பேரவை கூட்டம் கடந்த மார்ச் 24ம் தேதியுடன் அவசரமாக முடித்து கொள்ளப்பட்டது. இதனால், விரைவில் இந்த மாதம் 24ம் தேதிக்குள் சட்டப்பேரவை கூட்டம் நடத்த வேண்டும். ஆனால், தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவையில் சமூக இடைவெளியை கடைபிடித்து கூட்டம் நடத்துவதற்கு போதிய வசதி கள் இல்லை. எனவே, சென்னை சேப்பாக்கம் வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் சட்டப்பேரவை கூட்டம் முதன்முதலாக நடத்த முடிவு செய்யப்பட்டது. 1000 பேர் அமரக்கூடிய கலைவாணர் அரங்கத்தில் இரண்டாவது தளத்தில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மூன்றரை மீட்டர் இடைவெளியில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு இருக்கையிலும் மைக் வைக்கப்படுகிறது. கலைவாணர் அரங்கம் முழுவதும் சென்ட்ரலைஸ்டு ஏசி வசதி ஏற்கனவே செய்யப்பட்டுள்ளது. அந்த வளாகத்தில் ஏசி பயன்படுத்துவதை குறைக்கும் வகையில் மின் விசிறி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் சட்டசபை நடைபெறும் நேரத்தில் எம்எல்ஏக்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதில் அளிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய அதிகாரிகள் அமர்வதற்கென தனியாக அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டாவது தளத்தில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், ஆளும் கட்சி எம்எல்ஏக்களுக்கு அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தரைதளத்தில் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்களுக்கான அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்து கொள்ளும் முதல்வர், எதிர்க்கட்சி தலைவர், துணை முதல்வர், எம்எல்ஏக்கள், உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வரை அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவர்களது பரிசோதனை முடிவை வைத்து கொண்டு கூட்டத்தொடரில் அவர்களுக்கான தற்காலிக அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளன. இந்த அட்டையை காட்டினால் மட்டுமே வளாகத்தில் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த நிலையில் கலைவாணர் அரங்கை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. முதல்நாளான இன்று முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் எம்எல்ஏ ஜெ.அன்பழகன், கன்னியாகுமரி தொகுதி எம்பி எச்.வசந்தகுமார் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தொடர்ந்து அன்றைய தினம் முழுவதும் கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது. இதை தொடர்ந்து நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நாளை துணை நிலை அறிக்கை தாக்கல் செய்கிறார்.  தொடர்ந்து, 16ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் கேள்வி நேரம் உள்ளது. இந்த கூட்டத்தில், திமுக சார்பில் 20க்கும் மேற்பட்ட பிரச்னைகள் குறித்து பேச கவனஈர்ப்பு தீர்மானம் சபாநாயகர் தனபாலிடம் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, ஒரு தனி தீர்மானமும் சட்டப்பேரவையில் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, தமிழகத்தில் கடந்த 5 மாதத்திற்கும் மேல் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்தும், அதற்கான நடவடிக்கைகள், செலவுகள், மக்களுக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பு குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்த சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்தி திணிப்பு, புதிய கல்வி கொள்கை, நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்யும் விவகாரம், அரியர் மாணவர்கள் தேர்வில் உள்ள குளறுபடி, பிரதமரின் கிசான் திட்ட ஊழல் உள்ளிட்ட பல பிரச்னைகள் குறித்தும் எதிர்க்கட்சியினர் பிரச்னையை எழுப்ப திட்டமிட்டுள்ளனர். இதனால், சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்று கூறப்படுகிறது.

Tags : Need Suicide ,Opposition parties ,Corona ,Kisan , Legislators are gathering today in a tense situation like the Neat Suicide, Corona scandal; Opposition parties plan to stir up trouble over issues including Kisan project corruption
× RELATED ஒன்றாக நாம் இருந்தால் இந்த நிலை மாறும்: காங்கிரசின் பிரசார பாடல் வௌியீடு