×

ரஷ்யா கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி நாளை முதல் மக்களுக்கு விநியோகம்: உலகின் முதல் நாடாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு

மாஸ்கோ: கொரோனா வைரசை தடுக்க மக்கள் பயன்பாட்டுக்காக, உலகில் முதன்முறையாக ரஷ்யா தனது தடுப்பூசி விநியோகத்தை தொடங்கி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சீனாவின் வூஹானில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் பெருந்தொற்று, கிட்டத்தட்ட 9 மாதங்களுக்கு ேமலாக உலக மக்களை பெரும் இன்னலுக்கு ஆளாக்கி வருகிறது. தடுப்பு மருந்து கண்டறியப்படாததால், லட்சக்கணக்கான மக்கள் இறந்தும், கோடிக்கணக்கான மக்கள் நோய் தொற்றால் பாதித்தும் வருகின்றனர். நோயை தடுத்து நிறுத்துவதற்காக உலகின் பல நாடுகள் தடுப்பூசி கண்டறிவதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், ரஷ்யாவில் ‘ஸ்புட்னிக்-5’ என்ற தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகமும், கமலேயா தேசிய தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மையமும் இணைந்து உருவாக்கியுள்ள இந்த தடுப்பூசியை ரஷ்யா முறைப்படி பதிவு செய்துள்ளது. இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கிற 3வது இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனையும் தொடங்கி உள்ளது. இந்த சோதனையில் கிட்டத்தட்ட 31,000 தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி போட்டு சோதித்துள்ளனர். இதற்கிடையே, கொரோனா தொற்று பாதிக்காத வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் பயன்பாட்டுக்காக ‘ஸ்புட்னிக்-5’ தடுப்பூசியின் விநியோகம் தொடங்கி உள்ளது. இதை ரஷ்ய சுகாதார அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ கூறுகையில், ‘கமலேயா தேசிய தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மையத்தால் உருவாக்கப்பட்ட தடுப்பூசியின் முதல் தொகுதி ரஷ்ய பிராந்தியங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதல் விநியோக திட்டத்தின்படி, மிகவும் பாதிக்கப்படக்கூடியதாக அறியப்படும் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி முதலில் போடப்படும். இந்த தடுப்பூசி திங்கள்கிழமை (நாளை) முதல் வழங்கப்படும். நாட்டில் உள்ள 85 பிராந்தியங்களுக்கு தடுப்பூசி அனுப்பப்பட்டுள்ளது’ என்றார். முன்னதாக கடந்த ஆக. 11ம் தேதி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உலகின் முதல் கோவிட் -19 தடுப்பூசியாக ‘ஸ்புட்னிக் - 5’ என்று பதிவு செய்துள்ளதாக அறிவித்தார்.

இதை மாஸ்கோவின் கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் நிறுவனம் தயாரிப்பதாக தெரிவித்தார். இருந்தும், தடுப்பூசியின் நம்பகத்தன்மை குறித்து பல்வேறு நாடுகளும் விமர்சித்து வருகின்றன. அதேநேரத்தில், இந்த மாத தொடக்கத்தில், பிரிட்டிஷ் மருத்துவ இதழான ‘தி லான்செட்’ ரஷ்ய சுகாதார அமைச்சின் ‘ஸ்புட்னிக் - 5’ தடுப்பூசி குறித்து ஆய்வு கட்டுரையை வெளியிட்டது. அதில், இந்த தடுப்பூசி 100 சதவீதம் பயனுள்ளதாக இருப்பதாக தெரிவித்துள்ளது. அதனால், உலகிலேயே ரஷ்யாவில்தான் கொரோனா தடுப்பூசி முதன்முதலாக மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது என்பது முக்கியத்துவம் பெறுகிறது.

Tags : Russia ,announcement ,world ,country , Russia's Corona vaccine first distributed to people tomorrow: officially announced as the first country in the world
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...