×

ஸ்டாலின்தான் வந்துட்டாரு…திமுக அமோக வெற்றி: 159 இடங்களில் கூட்டணி வென்றது: 75 இடங்களை மட்டுமே பிடித்துஅதிமுக கூட்டணி படுதோல்வி

சென்னை: நாடே ஆவலுடன் எதிர்பார்த்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில், திமுக மட்டும் 127 இடங்களில் வெற்றி பெற்று தனி மெஜாரிட்டி பிடித்து சாதனை படைத்துள்ளது. மேலும், திமுக கூட்டணி 159 இடங்களை பிடித்துள்ளது. அதிமுக கூட்டணி 75 இடங்கள் மட்டுமே பிடித்து தோல்வி அடைந்துள்ளது. தமிழகத்தில், தற்போதைய சட்டப்பேரவையின் பதவி காலம் முடிவடைவதையொட்டி மொத்தமுள்ள 234 தொகுதிக்கான சட்டப்பேரவை தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில், சட்டமன்ற தேர்தலில் 72.81 சதவீத வாக்குகள் பதிவாகின.இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் திமுக 174 இடங்கள், காங்கிரஸ்-25, மதிமுக-6, மார்க்சிஸ்ட்-6, இந்திய கம்யூனிஸ்ட்-6, விடுதலை சிறுத்தைகள்-6, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-3, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி-3, மனிதநேய மக்கள் கட்சி-2, தமிழக வாழ்வுரிமை கட்சி-1, மக்கள் விடுதலை கட்சி-1, ஆதிதமிழர் பேரவை-1 ஆகிய கட்சிகள் இடம்பெற்றது.  அதிமுக கூட்டணியில் அதிமுக 180 இடங்கள், பாமக-23, பாஜ-20, தமாகா-6, பெருந்தலைவர் மக்கள் கட்சி-1, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்-1, புரட்சி பாரதம்-1, மூவேந்தர் முன்னேற்ற கழகம்-1, பசும்பொன் தேசிய கழகம்-1 ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தது. இதுதவிர மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே ஆகிய கட்சிகளும், அமமுக, தேமுதிக, எஸ்டிபிஐ, கோகுல மக்கள் கட்சி ஆகிய கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் தமிழகம் முழுவதும் உள்ள 75 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் நேற்று காலை 8 மணிக்கு எண்ணப்பட்டது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. தபால் வாக்கில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே அதிக வாக்குகளை பெற்றது. இதையடுத்து நேற்று காலை சரியாக காலை 8.30 மணிக்கு மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இதிலும் ஆரம்பம் முதலே திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முன்னிலை வகித்தது. அதன்படி கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திருச்சி கே.என்.நேரு, திருவண்ணாமலை எ.வ.வேலு, திருவெறும்பூர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்செந்தூர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் ஆரம்பம் முதலே அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தனர். அதேபோன்று எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆரம்பம் முதலே முன்னணியில் இருந்தார். அதே நேரம் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஒவ்வொரு சுற்று முடிவிலும் பின்னடைவு, முன்னிலை என மாறி மாறி இருந்தது. அங்கு திமுக சார்பில் போட்டியிட தங்கதமிழ்ச்செல்வன் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடுமையான போட்டி அளித்தார். கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்ட அமமுக கட்சி பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆரம்பம் முதலே பின்தங்கி இருந்தார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் 3வது இடத்தையே பிடிக்க முடிந்தது.திமுக சார்பில் போட்டியிட்ட 174 வேட்பாளர்களில் 127 பேர் வெற்றி பெற்றுள்ளனர். தமிழகத்தில் ஆட்சி அமைக்க 117 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை. தற்போது திமுகவினர் மட்டுமே 130 பேர் வெற்றி பெற்றுள்ளதால் திமுக தனி மெஜாரிட்டி பெற்றுள்ளது. இதன்மூலம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக இன்னும் ஓரிருநாளில் பதவியேற்க உள்ளார்.திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 16, மதிமுக 4, வி.சி. 4, மார்க்சிஸ்ட் 2, இ.கம்யூ. 2, கொம தேக. 1 என்ற சீட் அடிப்படையில் வெற்றி பெற்றுள்ளது.அதேநேரம் அதிமுக கூட்டணியில் அதிமுக மட்டும் 65 இடங்களிலும், பாமக 5, பாஜ 4, புரட்சிபாரதம் 1 ஆகிய இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதிமுக, கூட்டணி கட்சிகளுக்கு 54 சீட்களை விட்டு கொடுத்தது. இதில் 10 இடங்களில் மட்டுமே அக்கட்சிகள் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று மற்ற அணிகளாக மநீம, அமமுக, நாம் தமிழர் கட்சிகள் தமிழகத்தில் ஒரு இடங்களில் கூட வெற்றிபெறவில்லை. மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன்  கோவை தெற்கு தொகுதியில் ஆரம்பத்தில் முன்னிலையில் இருந்தார். ஆனால், கடைசி  சுற்றுகளில் பின்னடைவு ஏற்பட்டு கமலஹாசனும் தோல்வி அடைந்தார். தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக உள்ளதை தொடர்ந்து தமிழகத்தின் அரசியல் கட்சி தலைவர்கள், தேசிய கட்சி தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் தொலைபேசி, டிவிட்டர் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். நேற்று முழு ஊரடங்கு என்பதால் யாரும் நேரில் வந்து வாழ்த்து தெரிவிக்க வேண்டாம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் விஐபிக்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்று, யாரும் நேரில் வந்து வாழ்த்து தெரிவிக்கவில்லை. ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மட்டும் வந்து வாழ்த்து தெரிவித்தனர். திமுக தொண்டர்களும் வெற்றியை வீட்டில் இருந்தபடியே அமைதியாக கொண்டாடினர்.கருத்து கணிப்பு உண்மையானதுதமிழகத்தில் அடுத்து யார் ஆட்சி அமைப்பார்கள் என்று, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு கடந்த 29ம் தேதி இரவு 7 மணிக்கு வெளியிடப்பட்டது. இதில் பெரும்பாலான டிவிக்களின் கருத்து கணிப்பில் திமுக கூட்டணி 160 இடங்களுக்கு மேல் பிடிக்கும். அதிமுக கூட்டணி 70 இடங்களை பிடிக்கும் என்று கருத்து கூறியது. இந்த கருத்து கணிப்பு தற்போது உண்மையாகி உள்ளது. அதன்படி திமுக கூட்டணி 159 இடங்களும், அதிமுக கூட்டணி 74 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது….

The post ஸ்டாலின்தான் வந்துட்டாரு…திமுக அமோக வெற்றி: 159 இடங்களில் கூட்டணி வென்றது: 75 இடங்களை மட்டுமே பிடித்துஅதிமுக கூட்டணி படுதோல்வி appeared first on Dinakaran.

Tags : Stalin ,DMK ,Alliance ,ADMK alliance ,Chennai ,Tamil Nadu Legislative Assembly elections ,Dinakaran ,
× RELATED பேரூர் திமுக சார்பில் திருவேங்கடத்தில் நீர்மோர் பந்தல்