×

போதிய மழை இல்லாததால் அவிநாசி வட்டார குளங்கள் வறண்டது: குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

அவிநாசி: திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டார மக்களின் முக்கிய நீராதாரமாக  தாமரைக்குளம், சங்குமாங்குளம் ஆகிய 2 குளங்கள் திகழ்ந்து வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு அதிகமாக மழை பொழிந்ததால், தாமரைக்குளம் முழுவதும் நிரம்பி வழிந்தது. இதனால் அருகே உள்ள வேலாயுதம்பாளையம், ஆட்டையாம்பாளையம், பழங்கரை, அவிநாசி பேரூராட்சி பகுதிகளில் உள்ள கிணறுகளில் நிலத்தடி நீர் உயர்ந்தது. அப்போது விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றது. ஆனால் கடந்த 2 வருடங்களாக போதிய மழை இல்லாததால் இந்த வருடம் இந்த குளம் நிரம்பவில்லை. மேலும் குளத்திற்கு வருகின்ற மழை நீர்வழிப்பாதைகளில் அருகே உள்ள கிராமப்பகுதிகளில் நீராதாரத்திற்காக தடுப்புச்சுவர்களை அமைத்துள்ளதால் தண்ணீர் வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால் தாமரைக்குளம் வறண்டு காணப்படுகின்றது.

இதே போல சங்குமாங்குளத்துக்கு மழை நீர் வரத்து இருந்தால் அவிநாசி பேரூராட்சியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து எளிதாக ஆழ்குழாய் தண்ணீர் கிடைக்கும். இதனால் பேரூராட்சி பொதுமக்கள் அதிகளவு பயனடைவர். 240 ஏக்கருக்கும் மேல் பரப்பளவு கொண்ட சங்குமாங்குளத்தில் மரங்கள் அதிக அளவில் வளர்ந்து நீர்வழிப் பாதைகள் அடைபட்டு மழை பெய்தாலும் குளத்தில் நீர் நிரம்பாமல் நீராதாரம் பாதிக்கப்பட்டு வருகின்றது. இதேபோல, சேவூர் குளம் கடந்த 1972ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மழை பொழிந்தபோது நிரம்பியது. அதன் பிறகு காலப்போக்கில் மழை குறைந்ததால் இதுவரை இந்த குளம் நிரம்பவில்லை. மழைக்காலங்களில் இந்த குளம் நீர் நிரம்பி அது விவசாயத்திற்கு பயனுள்ளதாக அமைந்தது. மேலும் குளத்தை சுற்றியுள்ள வயக்காடு, பந்தம்பாளையம், கன்னடாங்குளம்புதூர் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றது.

மேலும் குளத்தை சுற்றி உள்ள கிராமங்களில் உள்ள கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து இருந்தது. இந்த நீர்பாசனத்தால் விவசாய நிலங்களில் வாழை, தென்னை, கரும்பு, காய்கறிகள் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டன. காலப்போக்கில் மழை குறைந்தது. இப்பகுதி மக்கள் விவசாயத்தை நம்பி இருந்தனர். மழை குறைந்ததால் தற்போது விவசாய பூமிகள் விற்பனை செய்யப்பட்டு அவைகள் வீட்டு மனைகளாக பிரித்து விற்கப்படுகிறது. ஒரு சில விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் ஒன்றும் பயிரிடாமல், குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக பல்வேறு நிறுவனங்களுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர். தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சேவூர் குளத்திற்கு வரும் நீர்வரும் பாதைகளில் அந்தந்த பகுதிகளில் தடுப்புச்சுவர்கள் அமைத்துள்ளதால் மழைநீர் வருவது தற்போது மிகவும் குறைந்துள்ளது.

சேவூர் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் பல கிராமங்களில் உள்ள குளம், குட்டைகள் நிரம்பி வருகின்றன. ஆனால் சேவூர் குளம் பெரிய அளவு பரப்பளவைக் கொண்டுள்ளதால் சிறிய குட்டைகளில் மட்டுமே தண்ணீர் உள்ளது. குளங்கள் நிரம்பாததால் நிலத்தடி நீர் மட்டம் உயரவில்லை. கிராமங்களில் வாழும் மக்களுக்கு ஆழ்குழாய் தண்ணீரை ஊராட்சி நிர்வாகத்தினரால் அதிகளவு வழங்க இயலுவதில்லை. கிராம மக்கள் தண்னீர் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர்.Tags : Avinashi , Adequate rainfall, indestructible area, pools dried up
× RELATED கோவை குளங்களில் கலக்கும் சாக்கடை...