×

தேனியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் காற்றாலை மின்சார உற்பத்தி அதிகரிப்பு

ஆண்டிபட்டி: தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக காற்றாலை மின்சார உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் ஒருநாள் மின்சார உற்பத்தி 1000 யூனிட்டிலிருந்து 7000 யூனிட்டாக அதிகரித்துள்ளது. ஆண்டிபட்டியை சுற்றியுள்ள கணேசபுரம், முத்துசங்கிலிபட்டி, ஆசாரிபட்டி, நல்லமுடிபட்டி, ஒக்கரைபட்டி, ஜி.உசிலம்பட்டி, கண்டமனூர்,
ஆத்தங்கரைபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட காற்றாலைகள் இயங்கி வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் ஆண்டிபட்டி, ராஜதானி, கண்டமனூர் பகுதிகளில் செயல்படும் துணை மின்நிலையத்திற்க்கு அனுப்பப்படுகிறது. கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கும். இந்த பருவமழை துவங்குவதற்கு முன்பாகவே அதாவது மே மாத இறுதியில் தேனி மாவட்டத்தில் தென்மேற்கு திசையில் இருந்து காற்று வீச துவங்கி விடும். ஆனால் நடப்பாண்டு தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தற்போதுதான் தாமதமாக பெய்து வருகிறது.

இதனால் மாவட்டத்தில் தென்மேற்கு திசையில் இருந்து காற்று வீசி வருவதால், ஆண்டிபட்டி சுற்றியுள்ள பகுதிகளில் செயல்படும் காற்றாலைகளில் மின்சார உற்பத்தியும் துவங்கி உள்ளது. மேலும் தென்மேற்கு திசையில் இருந்து அதிகப்படியான காற்று வீச துவங்கியுள்ளதால், பல்வேறு இடங்களில் புதிய காற்றாலைகள் அமைக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், ஒரு சில இடங்களில் காற்றாலைகளில் பழுது ஏற்பட்டு செயல்படாமல் நிற்கிறது. இதுகுறித்து காற்றாலை மின் உற்பத்தி பணியாளர்கள் தெரிவிக்கையில், ‘தென்மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகம் ஒரு நொடிக்கு 7 மீட்டர் முதல் 8 மீட்டர் என்ற அளவில் உள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் போது தேனி மாவட்டத்தில் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும். கடந்த சில மாதங்களாக காற்றாலையின் ஒருநாள் மின்சார உற்பத்தி 1000 முதல் 1500 யூனிட் வரை இருந்தது. தற்போது ஒரு காற்றாலையின் ஒரு நாள் மின்சார உற்பத்தி 7,000 யூனிட் என்ற அளவில் உள்ளது. இனிவரும் நாட்களில் தென்மேற்கு பருவக்காற்றின் வேகமும், காற்றாலைகளின் மின்சார உற்பத்தியும் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது’ என்றனர்.

Tags : Theni, southwest monsoon, wind, power generation, increase
× RELATED வால்பாறையில் படகு இல்ல பணிகள் தீவிரம்