×

திண்டிவனத்திலிருந்து சென்னை செல்ல பல மணி நேரம் காத்திருந்த பயணிகள்

*கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை

திண்டிவனம் :  திண்டிவனத்தில் பல மணி நேரம் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் ஒரே பேருந்தில் சமூக இடைவெளி இல்லாமல் பயணம் செய்தனர்.  நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவியதால் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இதனால் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் போலீசாரின் கெடுபிடிகளும் அதிகளவில் இருந்தது. கடந்த 4 மாதத்திற்கு மேலாக வீட்டில் முடங்கிய பொதுமக்கள் கூலித் தொழிலாளர்கள் தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் வேலைக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர்.

 சென்னையில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்த லட்சக்கணக்கானோர் கொரோனா வைரசால் முடங்கி போன நிலையில் வேறு வழியில்லாமல் அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்றனர். சொந்த ஊர்களுக்கு வந்து 4 மாதங்களாக உணவுக்கே கஷ்டப்பட்டு வந்த நிலையில் தற்போது பேருந்துகள் இயக்கப்படுவதால் சென்னைக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். இதனால் திண்டிவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏராளமானோர் சென்னைக்கு அரசு பேருந்தில் செல்ல மேம்பால கீழ்ப்பகுதியில் காத்திருந்தனர்.

 திண்டிவனம் மேம்பால கீழ்ப்பகுதியில் 100க்கும் மேற்பட்டோர் பல மணி நேரம் காத்திருந்தும் பேருந்துகள் வராததால் ஏமாற்றமடைந்தனர். ஒரு சிலர் கனரக வாகனங்கள், வேன், கார் உள்ளிட்ட வாகனங்களில் அதிக கட்டணம் கொடுத்து சென்றனர். மேலும் பல மணி நேரமாக காத்திருந்த பயணிகள், கொரோனா அச்சத்தையும் மறந்து அங்கு வந்த அரசு பேருந்தில் முண்டியடித்துக்கொண்டு ஏறிச் சென்றனர். பேருந்தில் அதிக அளவில் பயணிகளை ஏற்றி செல்வதால் மேலும் பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகையால் பொதுமக்களின் நலன் கருதி சென்னைக்கு கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீண்டும் கொரோனா ஏற்படும் அபாயம்

சென்னையிலிருந்து கிராமப்புற பகுதிகளுக்கு வந்த ஏராளமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். மேலும் வாழ்வாதாரத்தை இழந்து மன உளைச்சலுக்கு ஆளாகி தற்போது வேலை செய்தால் மட்டுமே குடும்பத்தை காப்பாற்ற முடியும் என்ற நோக்கில் பலபேர் சென்னைக்கு வேலைக்கு செல்கின்றனர். அதிகளவு கூட்டமாக பயணம் செய்வதால் மீண்டும் இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் சூழ்நிலைக்கு
தள்ளப்பட்டுள்ளனர்.

Tags : Passengers ,Chennai ,Tindivanam , Tindivanam, government bus,Passengers, waiting for bus
× RELATED செங்கல்பட்டு புறவழிச்சாலையில் லாரி...