×

வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் மேம்பாட்டு பணிகள் தீவிரம்

ஈரோடு :  வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் மேம்பாட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தின் சுற்றுலா தலங்களின் ஒன்றாக வெள்ளோடு பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த சரணலாயம் 215 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பறவைகளுக்கான சீசன் துவங்கும். இந்த காலங்களில் வெள்ளோடு சரணாலயத்திற்கு பெலிகான், கொசு உல்லான், வண்ணான் நாரை, கூழைகெடா, பெரிய நீர்காகம், பாம்புதாரா, சாம்பல் நாரை, வெண்மார்பு மீன்கொத்தி பறவை, ஜெம்புகோரி உள்ளிட்ட பறவைகள் வந்து செல்கிறது. இதில், கூழைகெடா ரக பறவை ஆஸ்திரேலியாவில் இருந்தும், கொசு உல்லான் பறவை சைபீரியாவில் இருந்தும் வருகிறது.

இந்த சரணாலயத்திற்கு ஈரோடு மட்டும் அல்லாது பல்வேறு மாவட்டத்தில் இருந்தும் மக்கள் வந்து செல்வார்கள். சரணாலயத்தின் மேம்பாட்டு பணிக்காக கடந்த 2019ம் ஆண்டு அரசு ரூ.4.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இதற்கான பணிகள் நடந்து வந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, மக்களும் சரணாலயத்திற்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பறவைகள் சீசன் துவங்க உள்ள நிலையில், சரணாலயத்தில் மேம்பாட்டு பணிகள் மட்டும் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

    இது குறித்து ஈரோடு மாவட்ட வன அதிகாரி விஸ்மிஜூ விஸ்வநாதன் கூறியதாவது: வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் கொரோனா பரவல் காரணமாக தற்போது வரை மக்கள் உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட மேம்பாட்டு பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இதில், சரணாலயத்தில் மண்திட்டுகள் அமைத்தல், குளத்தின் கரைகளை பலப்படுத்துதல், பறவைகள் அமர பனைமரங்கள் அமைத்தல், சோலார் மின்விளக்குகள், கண்காணிப்பு கோபுரம், தேவையான இடங்களில் சிறிய பாலம் போன்றவை அமைத்து வருகிறோம்.

ஆங்காங்கே மக்களின் ஓய்வு அறையும் கட்டப்பட்டு வருகிறது. மேலும், சரணாலயத்திற்குள் மக்கள் சென்று வர நடைபாதை அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இந்த மேம்பாட்டு பணிகள் அனைத்தும் சில மாதத்தில் முடிக்கப்படும்.  சரணாலயத்தில் மக்களை அனுமதிக்க அரசு உத்தரவிட்டப்பின், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து மக்கள் அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Wild Bird Sanctuary , Wild Bird Sanctuary, vellodu Bird Sanctuary,erode
× RELATED மோடியின் ஆதிக்கத்தில் இருந்து நாடு...