×

திருவண்ணாமலையில் 5 மாதத்துக்கும் மேலாக ஊரடங்கால் மூடப்பட்டிருக்கும் உழவர் சந்தை திறப்பது எப்போது?

*விவசாயிகள் எதிர்பார்ப்பு

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக மூடிக்கிடக்கும் உழவர் சந்தை திறக்கப்படுமா என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு காரணமாக உழவர் சந்தைகள் மூடப்பட்டன. அதன்பிறகு, கடைகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் திறக்க தளர்வுகளை அரசு அறிவித்த போதும், உழவர் சந்தைகள் திறக்க அனுமதிக்கவில்லை. இந்நிலையில், கடந்த 1ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்தும்தொடங்கியிருக்கிறது. கடைகள் திறக்கும் நேரமும் இரவு 8 மணி வரை என நீட்டிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் தடுக்க விழிப்புணர்வு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 5 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ள உழவர் சந்தையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள உழவர் சந்தையில் சுமார் 50 காய்கறி கடைகள் சமூக இடைவெளியுடன் நடத்தும் அளவில் இட வசதியுள்ளது. அதேபோல், நெரிசல் ஏற்படாமல் தடுக்க, சமூக இடைவெளியுடன் காய்கறிகளை வாங்கிச் செல்லவும் போதுமான இட வசதியிருக்கிறது. தேவை ஏற்பட்டால், ஒருசில கடைகளை உழவர் சந்தையை ஒட்டி அமைந்துள்ள திறந்தவெளி பகுதியிலும் அனுமதிக்கலாம். எனவே, உழவர் சந்தையை முறையான கட்டுப்பாடுகளுடன் திறக்க அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

திருவண்ணாமலையில் தற்போது காய்கறி மார்க்கெட் மூடப்பட்டுள்ளது. நடைபாதை கடைகள் மற்றும் நடமாடும் வாகனங்கள் மூலம் மட்டுமே காய்கறி விற்கப்படுகிறது. எனவே, உரிய சுகாதார வழிகாட்டு நடைமுறைப்படி உழவர் சந்ைதயை திறந்தால், உற்பத்தியாகும் காய்கறிகளை நேரடியாக விவசாயிகள் விற்று பயன்பெற முடியும் என எதிர்பார்க்கின்றனர்.

Tags : Thiruvannamalai ,farmers' market , Tiruvannamalai, Farmers market,corona virus, lockdown
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...