×

50 வருடங்களுக்கு பிறகு பயன்பாட்டிற்கு வந்த மங்களநாதர் தீர்த்தம்

சாயல்குடி : திருஉத்திரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் பயன்பாடின்றி கிடந்த புனித மங்கள தீர்த்தக் கிணறு சுமார் 50 வருடங்களுக்கு பிறகு பயன்பாட்டிற்கு வந்தது. ராமநாதபுரம் அருகே திருஉத்திரகோசமங்கையில் மங்களேஸ்வரி உடனுரை மங்களநாதர்(சிவன்) கோயில் உள்ளது. இக்கோயில் உள்வளாகத்திற்குள் ஒற்றை மரகத கல்லால் ஆன நடராஜருக்கு நடக்கும் ஆருத்ரா தரிசனம் உலகபுகழ் பெற்று விளங்குகிறது. இதனால் உள்மாவட்டம், தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி வெளிமாநிலத்தவர், வெளிநாட்டு யாத்தீரிகர்கள், பக்தர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. மேலும் சோமவாரம், பிரதோஷம், சிவராத்திரி, மகாசிவராத்திரி, பவுர்ணமி, அமாவாசை, அன்னாபிஷேகம், ஆருத்ரா தரிசனம் உள்ளிட்ட விஷேச காலங்களில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்நிலையில் கோயில் நுழைவாயில் பகுதியில் அமைந்துள்ள ராஜகோபுரத்தின் கிழக்கில் பிரம்ம தீர்த்தக்குளமும், மரகதநடராஜர் சன்னதிக்கு கிழக்கு புறம் அக்னி தீர்த்தக்குளமும், மங்களநாதர் சன்னதி அருகே ஹரித்துவார் தீர்த்தம்,  அம்மன் சன்னதி செல்லும் வழியிலுள்ள மங்களவிநாயகர் கோயில் முன்பு மங்கள தீர்த்தமும் உள்ளது.

இதில் ஹரித்துவார், அக்னி தீர்த்தம் மட்டுமே பயன்பாட்டில் இருந்து வந்தது. சுமார் 50 வருடங்களுக்கு மேலாக மங்களதீர்த்தம், பிரம்ம தீர்த்தம் பயன்பாட்டில் இல்லாமல் இருந்து வந்தது. இதனால் இந்த இரண்டு தீர்த்தமும் மாசடைந்து பயன்பாடின்றி கிடந்தது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் மங்களதீர்த்தக் கிணறை சுற்றி பாதுகாப்பு சுவர்கள் கட்டப்பட்டு, சீரமைக்கப்பட்டது. மாசடைந்த தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு தூர்வாரப்பட்டது. பிறகு வேள்விகள் வளர்க்கப்பட்டு, ஹோமங்கள், பரிகாரம் பூஜைகள் செய்யப்பட்டு, மீண்டும் புனிதப்படுத்தப்பட்டது.  

இதனைதொடர்ந்து புதிய ஊற்று ஊறி, தண்ணீர் பெருகி கிடக்கிறது. இந்த தண்ணீர் மூலவர் மற்றும் சாமி விக்கிரகங்கள் அபிஷேகம் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. திவான் பழனிவேல் பாண்டியன் கூறும்போது, ‘‘புராண காலத்தில் தொடர்புடைய இக்கோயில் தீர்த்தங்கள், கடும் வறட்சி ஏற்பட்ட காலத்தில் கூட வற்றாமல் இருந்துள்ளது. இதனை மூலவர், அம்பாள் உள்ளிட்ட சாமி விக்கிரகங்களுக்கு அபிஷேகத்திற்கு பயன்படுத்தி வந்துள்ளனர். மாசடைந்து கிடந்த மங்கள தீர்த்தம் ஆகமவிதிகள் படி பரிகார பூஜைகள், வேள்விகள் நடத்தப்பட்டு, முறைப்படி தூர்வாரப்பட்டது. புதியநீர், புனித நீராக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு முற்றிலுமாக நீங்கிய பிறகு பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’’என்றார்.

Tags : Mangalanathar Theertham , Mangalanathar Temple, Mangala Tirtha Well, ramanathapuram,
× RELATED வடசென்னை அனல் மின்நிலையத்தில் 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு