×

சோதனைச்சாவடியில் ஒற்றை யானை முகாம்

சத்தியமங்கலம் :   கர்நாடக மாநிலத்தில் விளைவிக்கப்படும் கரும்பு வெட்டப்பட்டு லாரியில் பாரம் ஏற்றி சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. தினமும் 100க்கும் மேற்பட்ட கரும்பு பாரம் ஏற்றிய லாரிகள் இச்சாலையில் செல்கின்றன. ஆசனூர் அருகே தமிழக கர்நாடக எல்லையில் ஆசனூர் அருகே அமைந்துள்ள காரப்பள்ளம் வன சோதனைச்சாவடி பகுதியில் அதிக உயரத்திற்கு பாரம் ஏற்றி வரும் லாரிகளை கண்டறிய உயர தடுப்பு கம்பி அமைக்கப்பட்டுள்ளது.

இதில் அதிக உயரத்திற்கு பாரம் ஏற்றி வரும் கரும்பு லாரிகள் உயர தடுப்புக் கம்பியின் அருகே செல்லும்போது கரும்புத் துண்டுகள் அதில் உராய்ந்து உடைந்து கீழே சிதறி விழுகின்றன. இந்த கரும்பு துண்டுகளைத் தின்பதற்காக ஒற்றை யானை வாகன சோதனைச்சாவடியை சுற்றிச்சுற்றி வருகிறது. பகல் நேரத்தில் வாகனப் போக்குவரத்து அதிகமுள்ள நேரங்களில்கூட இந்த ஒற்றை யானை சிறிதும் அஞ்சாமல் அப்பகுதியில் கீழே விழுந்த கரும்பு துண்டுகளை தனது தும்பிக்கையால் எடுத்து முறித்துக் தின்பதில் ஆர்வம் காட்டுகிறது.

இந்த யானையை விரட்டுவதற்காக வன சோதனைச்சாவடியில் உள்ள வன ஊழியர்கள் தனது கையில் வைத்துள்ள குச்சியால் அங்குள்ள டிரம் மற்றும் டேபிளை தட்டி ஒலி எழுப்பி விரட்ட முயற்சித்தாலும் யானை சிறிதும் அஞ்சாமல் சாலையில் சிதறிக் கிடக்கும் கரும்பு துண்டுகளை எடுத்துக் தின்பதிலேயே கவனமாக இருக்கிறது. கரும்புத் துண்டுகளைத் தின்று சுவைத்துப் பழகிய இந்த ஒற்றை யானை வனப்பகுதியில் சென்று தீவனம் உட்கொள்ளாமல் கரும்புக்கு அடிமையாகி விட்டது.

இந்த ஒற்றை யானை இரவு, பகல் பாராமல் சோதனைச் சாவடி அருகே சாலையில் முகாமிட்டுள்ளதால் வனத்துறை ஊழியர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதிக உயரத்திற்கு பாரம் ஏற்றி வரும் கரும்பு லாரிகளால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. எனவே அதிக உயரத்திற்கு பாரம் ஏற்றி வரும் லாரிகளை கண்டறிந்து அந்த லாரிகளின் மீது வழக்குப்பதிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : elephant camp ,checkpoint , Sathyamangalam, Elephant,Check post, karnataka Border
× RELATED பர்லியார் சோதனைச்சாவடியில் கலெக்டர் ஆய்வு