×

சாலை வசதியின்றி 9 கி.மீ மலைப்பாதையில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை டோலி கட்டி தூக்கிச்சென்ற மக்கள்

*ஆந்திர மாநிலத்தில் பரபரப்பு

திருமலை : சாலை வசதியின்றி 9 கி.மீ மலைப்பாதையில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை மக்கள் டோலி கட்டி தூக்கிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினம் மற்றும் விஜயநகரம்  மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன.  இங்கு பல்லாயிரக்கணக்கான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சரியான சாலை வசதி, போக்குவரத்து வசதியில்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், அவசர காலங்களில் மருத்துவமனைக்கு உரிய நேரத்தில் செல்ல முடிவதில்லை.

இந்நிலையில், கடந்த 10ம் தேதி விஜயநகரம் மாவட்டம் துங்காடா கிராமத்தை சேர்ந்த கஸ்தூரி தேவுடம்மா என்ற நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அங்கிருந்து மருத்துவமனைக்கு செல்ல சரியான சாலை வசதியில்லை.
இதையடுத்து, அவரது உறவினர்கள் அந்த கர்ப்பிணியை டோலி கட்டி 9 கி.மீட்டர் தூரம் மலைப்பகுதிகள் வழியாக தூக்கிச்சென்றனர். அப்போது, உடன் வந்த பெண்கள் ஆந்திர முதல்வரை குறிப்பிட்டு ‘ஜெகன் அண்ணா நாங்கள் அடையும் வேதனையை பாருங்கள், எங்கள் கிராமங்களுக்கு உடனடியாக சாலை வசதியை செய்து கொடுங்கள்’ என்று அழுது புலம்பியவாறு சென்றனர்.

சாலை வசதியுள்ள இடத்திற்கு வந்த பிறகு அவர்கள் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து தகவல் தெரிவித்தனர். ஆனால், 2 மணிநேரத்திற்கு மேலாகியும் ஆம்புலன்ஸ் வராத காரணத்தால் ஆட்டோவில் கர்ப்பிணியை விஜயநகரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Tags : road facilities ,road , tirumalai,preganant lady,Labor pains,Dolly tied up
× RELATED திருக்கழுக்குன்றம் அருகே மினி வேன்...