×

சுங்கக்கட்டணம் செலுத்துவதில் குளறுபடி அரசு பஸ்களையே அனுமதிக்க மறுக்கும் டோல்கேட் ஊழியர்கள்

*தடுத்து நிறுத்துவதால் பயணிகள், கண்டக்டர்கள் அவதி

சேலம் : சுங்கக்கட்டணம் செலுத்துவதில் ஏற்படும் குளறுபடியால் டோல்கேட்டில், அரசு பஸ்களை ஊழியர்கள் தடுத்து, நிறுத்தி வருகின்றனர். இதனால் பயணிகள், கண்டக்டர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சென்னை, விழுப்புரம், சேலம், கும்பகோணம், திருச்சி, கோவை, மதுரை, திருநெல்வேலி என்று 8 கோட்டங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த கோட்டங்களில் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

பின்னர் ஜூன் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை மீண்டும் பஸ் போக்குவரத்து தொடங்கியது. கொரோனா தொற்று அதிகரித்த காரணத்தால் ஜூலை, ஆகஸ்ட் உள்ளிட்ட மாதங்களில் மீண்டும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் கடந்த செப்.1ம் தேதி முதல் 6ம் தேதி வரை மாவட்டங்களுக்குள்ளும், 7ம் தேதியில் இருந்து மாவட்டங்களுக்கு இடையேயும் 60 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த சில மாதமாக சுங்கச்சாவடிகளும் சரிவர செயல்படாமல் இருந்தது. சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் அரசு பஸ்களுக்கு போக்குவரத்து கழகம் சார்பில் அனுப்ப வேண்டிய பட்டியலை சரிவர அனுப்பவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் பல சுங்கச்சாவடிகளில் அரசு பஸ்களை அனுமதிக்க மறுத்து சுங்கச்சாவடி ஊழியர்கள் தடுத்து நிறுத்தி வருகின்றனர். இந்த வகையில், கடந்த 8ம் தேதி விழுப்புரம் கோட்டத்திற்குட்பட்ட பஸ் ஒன்று கிருஷ்ணகிரியில் இருந்து பெங்களூருக்கு கடந்து சென்றது. அப்போது அந்த பஸ் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடிக்கு வந்தது. அப்போது சுங்கச்சாவடி ஊழியர்கள், இந்த பஸ் சுங்கச்சாவடியை கடந்து செல்லும் பட்டியலில் இல்லை எனக்கூறி மேற்கொண்டு பஸ் செல்ல அனுமதிக்கவில்லை.

இதனால் அதில் பயணம் செய்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இறக்கிவிடப்பட்டனர். பின்னர் மாற்று பஸ் வரவழைக்கப்பட்டு அதில் ஏற்றி பெங்களூருக்கு அனுப்பப்பட்டனர். அதேபோல் அந்த வழித்தடத்தில் 5 பஸ்களில் பயணம் செய்த பயணிகள் தங்களின் சொந்த பணத்தை சுங்க கட்டணம் செலுத்தினார்கள். அதன்பிறகு பஸ்கள் புறப்பட்டு சென்றது. 2 பஸ்கள் சுங்கக்கட்டணம் செலுத்தாததால் மேற்கொண்டு செல்ல அனுமதிக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் பயணிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர்.

இதேபோல் கோவை கோட்டத்திற்கு உட்பட்ட பஸ் ஒன்று நேற்று முன்தினம் காலை 9.30 மணிக்கு கோவையில் இருந்து சேலம் வழியாக திருவண்ணாமலைக்கு புறப்பட்டது. இந்த பஸ் சங்ககிரி வைகுந்தம் சுங்கக்சாவடிக்கு வந்தபோது, சுங்கச்சாவடி ஊழியர்கள் அந்த பஸ்சை அனுமதிக்க மறுத்தனர். டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் இந்த பஸ்சுக்குரிய பாஸ் இருக்கிறது என்று கூறியும் அனுமதிக்க மறுத்து வாக்குவாதம் செய்தனர். பின்னால் ஏராளமாக வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் வேறு வழியின்றி இம்முறை செல்லுங்கள், திரும்பி வரும்போது பஸ்சை கடந்து செல்ல விடமாட்டோம் என்று கறாராக கூறினர். அப்போது கண்டக்டர் சுங்கச்சாவடியை கடந்து செல்லும் பாஸ் உள்ளது என்று கூறினார். ஆனால் அதை சுங்கச்சாவடி  ஊழியர்கள் ஏற்க மறுத்தனர்.

இதனால் அந்த பஸ் சுங்கச்சாவடியில் பயணிகளுடன் பத்து நிமிடம் வரை காத்திருந்தது. போக்குவரத்து கழகம் செய்யும் குளறுபடியால், இதேபோல் பல பஸ்கள் சுங்கச்சாவடிகளில் காத்திருக்க வேண்டியுள்ளது என்று டிரைவர், கண்டக்டர்கள் புலம்பி வருகின்றனர். பொதுமக்கள் பயணிக்கும் அரசு பஸ்களையே டோல்கேட்டில் அனுமதிக்க மறுப்பது தனியார் நினைத்தால் எதுவேண்டுமானாலும் நடக்கும் என்பதை காட்டுவதாக உள்ளது என பயணிகள் புலம்பினர்.
இது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது: சேலம் கோட்டம் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கியது. இம்மாவட்டங்களில் 1900 பஸ்கள் இயக்கப்படுகிறது. தற்போது இதில் 70 சதவீத பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. சேலம் கோட்டம் சார்பில் இயக்கப்படும் பஸ்களில் எந்தெந்த பஸ்கள் சுங்கச்சாவடி வழியாக இயக்கப்படுகிறதோ, அந்த பஸ்களின் பட்டியல் மாதம்தோறும் சம்பந்தப்பட்ட சுங்கச்சாவடிக்கு அனுப்பப்படும்.

மாற்று பஸ் இயக்கப்படும் பட்சத்தில், அந்த பஸ் சுங்கச்சாவடியை கடக்க கண்டக்டர் கட்டணம் செலுத்துவார். சேலம் கோட்டத்தை பொறுத்தமட்டில் தற்போது இயக்கப்படும் அனைத்து பஸ்களின் பட்டியலும் அந்தந்த சுங்கச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனால் கடந்த 6 நாட்களாக எவ்வித பிரச்னையும் இல்லாமல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. வேறு சில கோட்ட பஸ்களில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதில் குளறுபடி உள்ளது. அதை சீர் செய்து வருகின்றனர். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Tags : Tolkien , Tollgate,Government bus, confusion, tollgate workers,
× RELATED சர்ச்சைக்குரிய டூல்கிட் விவகாரத்தில்...