×

சேலம் அருகே குடியிருப்புக்குள் புகுந்ததால் சாலையை குறுக்கே வெட்டி ஏரி தண்ணீர் வெளியேற்றம்

*போக்குவரத்தை துண்டித்து அதிரடி நடவடிக்கை

சேலம் : சேலம் அருகேயுள்ள சேலத்தான்பட்டி ஏரியில் இருந்து வெளியேறிய தண்ணீர் குடியிருப்புகளுக்குள் புகுந்ததால், சாலையை குறுக்கே வெட்டி ஏரி நீரை வெளியேற்றப்பட்டது. சேலத்தை அடுத்துள்ள சேலத்தான்பட்டியில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் பழமையான ஏரி உள்ளது. இந்த ஏரியை நீராதாரமாக கொண்டு சிவதாபுரம், ஆண்டிப்பட்டி, சோளம்பள்ளம், அரியாகவுண்டம்பட்டி உள்ளிட்ட 7 ஊர் மக்கள் வாழ்கின்றனர். ஏரியில் தண்ணீர் நிரம்பியிருக்கும்போது, இப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் நல்ல முறையில் இருக்கிறது. இருப்பினும் மழைக்காலங்களில் ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர், சிவதாபுரம் சாலையில் பெருக்கெடுத்து ஓடி, குடியிருப்புக்குள் புகுந்து வருகிறது.
சேலத்தில் 2 நாட்களுக்கு முன் பெய்த கனமழையால், சேலத்தான்பட்டி ஏரி நிரம்பி மதகு வழியே தண்ணீர் வெளியேறியது.

ஓடையில் பல இடங்களில் அடைப்பு இருந்ததால், வழக்கத்தை விட மிக அதிகளவு தண்ணீர், சிவதாபுரம் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் அங்குள்ள குடியிருப்புகளுக்குள்ளும் புகுந்தது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து 2 நாட்களாக சாலையில் ஏரி நீர் சென்றதால், சிலர் மீன் பிடித்தனர். மேலும், குடியிருப்பு பகுதிக்கு தண்ணீர் வராமல் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை, கலெக்டர் ராமன் திடீரென சேலத்தான்பட்டி ஏரியை ஆய்வு செய்தார். அவர், ஏரி நீர், சாலையில் செல்வதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதன்பேரில், சிவதாபுரம்-இளம்பிள்ளை சாலையை குறுக்கே வெட்டி, மறுபுறத்தில் செல்லும் கால்வாயில் தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2 பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு, சாலையை குறுக்கே வெட்டினர். பிறகு சாலையின் இருபுறத்திலும் செல்லும் கால்வாயில் ஏரி நீரை திருப்பி விட்டு வெளியேற்றினர். இந்ந தண்ணீர், புத்தூர் அக்ரஹாரம் ஏரிக்கு செல்லும் வகையில் கால்வாயில் இருந்த அடைப்புகளை அகற்றி திருப்பி விடப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சாலையை குறுக்கே வெட்டியதால், சிவதாபுரம்-இளம்பிள்ளை போக்குவரத்து அடியோடு நின்றது. அவ்வழியே வாகனங்கள் செல்ல தடை விதித்து, தடுப்புகளை போலீஸ் துணை கமிஷனர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் ஏற்படுத்தினர். மாற்றுப்பாதை வழியே வாகனங்கள் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. முன்னதாக சாலையை வெட்டக்கூடாது என பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், 30க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

ஏரிக்குள் குடியிருப்பு வந்ததே காரணம்

‘‘சேலத்தான்பட்டி ஏரிக்குள் மண்ணை கொட்டி, குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்த ஏரிக்குள் ரூ.42.18 கோடி மதிப்பில் 496 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டது. இந்த குடியிருப்பை கட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. பெரிய அளவில் இருந்த ஏரியை சுருக்கி கொண்டு வந்து விட்டதால், அதிகளவு தண்ணீர் தேங்காமல் விரைந்து நிரம்பி, சாலையில் பெருக்கெடுத்து குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. அரசே விதிமுறைகளை மீறி நடந்து கொண்டதே, இத்தகைய நிலை ஏற்பட காரணம்,’’என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.


Tags : road ,Salem ,apartment , Salem, Flood, Water Pond, road, damaged
× RELATED கல்லட்டி மலைப்பாதையில் சாலை விரிவாக்க பணி மும்முரம்