×

நெல் கொள்முதல் நிலையத்தில் வியாபாரிகளுக்கு முன்னுரிமை : விவசாயிகள் குற்றச்சாட்டு

மயிலாடுதுறை : தமிழக அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. எனவே இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 113 இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளது. இதுவரை 1 லட்சம் டன் நெல்கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நல்ல மகசூல் கிடைத்ததால் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு கொள்முதல் நிலையத்தை விவசாயிகள் அதிகம் நாடியுள்ளனர், மேலும் நெல்லை கொள்முதல் செய்வதற்கு தங்களது நெல்மூட்டைகளை முன்கூட்டியே கொள்முதல் நிலையம் கொண்டுசென்று அடுக்கி வைத்துள்ளனர்.

75% கொள்முதல் நிலையங்கள் திறந்த வெளியாக உள்ளதால் கொள்முதல் செய்யும் நெல்மூட்டைகள் நிலையங்களிலேயே தேங்கி கிடக்கிறது. ஏறத்தாழ அறுவடை முடிவடைந்துவிட்டது. ஒருமாதமாக விவசாயிகள் நெல்லை வாங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு விவசாயியும் கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொண்டுபோய் அடுக்கி வைத்துவிட்டு காவல்காத்து வருகின்றனர். அவ்வாறு வைக்கப்படும் நெல்மூடைகள் மழையில் நனையாமல் இருப்பதற்கு தார்பாயை வாடகைக்கு எடுத்து நாள் ஒன்றுக்கு ரூ.250 வீதம் வாடகை அளிக்கின்றனர்.

மயிலாடுதுறை நீடூர் கொள்முதல் நிலையத்தில் 8 ஆயிரம் மூட்டைகளுக்குமேல் விவசாயிகளால் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. மழையிலிருந்து நெல்மூட்டைகளை பாதுகாக்க குறைந்தபட்சம் ஒரு விவசாயி ரூ.3000த்திலிருந்து ரூ.4 ஆயிரம் வரை செலவு செய்கின்றனர். தனியார் வியாபாரிகள் நீடூர் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் கொண்டுபோய் இரவு நேரத்தில் அடுக்கி வைப்பது மறுநாள் அந்த நெல்லை விற்பனை செய்துவிடுவது வாடிக்கையாக இருக்கிறது.
கொற்கை மற்றும் ஒரு கிராமத்தை சேர்ந்த பழனி, ராமதாஸ் என்ற வியாபாரிகளின் நெல்லை கொள்முதல் நிலைய ஊழியர்கள் ஒருநாளிலேயே எடுத்து விடுகின்றனர்.

 இந்த செயல் குறித்து விவசாயிகள் கேட்டால் கொள்முதல்நிலைய ஊழியர்கள் முறையான பதில் கூறுவதில்லை. ஏற்கனவே 30 நாட்களாக காத்துகிடக்கும் வேளையில் மேலும் தாமதப்படுத்தினால் என்ன செய்வது என்ற பயத்தில் விவசாயிகள் ஒருவித அச்சத்தில் உள்ளனர். தற்பொழுது ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் அதிகபட்சமாக 10ஆயிரம் நெல்மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டு மாதக்கணக்கில் காத்திருக்கின்றனர், ஒருசில விவசாயிகள் கொள்முதல் நிலையத்தில் நெல்லை அடுக்க முடியாததால் வீட்டிலேயே அடுக்கி வைத்துள்ளனர்.

குறைந்தபட்சம் இன்னும் 20 தினங்களாவது கொள்முதல் நிலையம் திறந்திருந்தால்தான் விவசாயிகள் நெல்லை விற்பனை செய்ய முடியும். எனவே மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்து விவசாயிகள் நெல்லை விற்பனை செய்யும் வரை கொள்முதலை நீடிக்க வேண்டும், நீடூர் கொள்முதல் நிலையத்தில் தனியார் வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளிப்பது குறித்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : traders ,paddy procurement center , Paddy,Direct paddy purchase, mayiladuthurai, farmers,
× RELATED நீடாமங்கலத்தில் மேம்பாலப்பணியை...