×

குன்னம் அருகே ஓடையில் புதிய கல்மரம் கண்டுபிடிப்பு

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா பெரியம்மா பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கரம்பியம் கிராமத்தில் இரண்டு மீட்டர் நீளமுடைய புதிய கல்மரம் ஒன்று கண்டறியப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா கரம்பியம் கிராமத்தில் ஊருக்கு வடக்கே உள்ள பொன்னேரிக்கு தண்ணீர் கொண்டுவரும் ஓடையில் புதைந்திருந்த கல் மரம் ஒன்று வெளிப்பட்டு உள்ளது. இரண்டு மீட்டர் நீளமுடைய இக்கல் மரமானது சுண்ணாம்பு பாறை ஒன்றில் புதைந்து இருந்து அதன் மேற்பகுதி மட்டும் வெளிப்பட்டு உள்ளது.

இதன் நுனிப்பகுதி அகலமாக காணப்படுகிறது. எனவே, கிளைகளுடன் கூடிய மரமாக இருந்திருக்கலாம். மேலும் ஓடையில் சிறுசிறு கிளைகளை போன்ற அமைப்புடைய மரத் துண்டுகளும் கிடைக்கப்பெற்றுள்ளது . கிளைகளுடன் கொண்ட நுனிப்பகுதியாக இருக்கக்கூடும் என கருதப்படுகிறது. இதற்கு முன்பு கல்மரமானது 1940ம் ஆண்டில் ஆலத்தூர் தாலுகா சாத்தனூரில் எம். எஸ். கிருஷ்ணன் என்ற புவியியல் ஆய்வாளர் பதிவு செய்தார். அதன் பின்னர் பல்வேறு கல் மரத்துண்டுகள் சுற்று வட்டார கிராமங்களில் கண்டறியப் பட்டுள்ளது. சாத்தனூர் கிராமத்தில் ஏரிக்கு வடக்கே ஏரிக்கு தண்ணீர் வரும் ஓடையில் கண்டறியப்பட்டது போல கரம்பியம் கிராமத்திலும் ஏரிக்கு வடக்கே ஓடையில் கண்டறியப்பட்டுள்ளது. இக் கல்மரமும் சாத்தனூர் கல் மரத்தைப் போன்று கிரிடேசியஸ் (Cretaceous) காலத்து மரமாக இருக்கலாம்.

ஆலத்தூர் தாலுகாவில் மட்டுமே காணக் கிடைக்கப்பெற்ற கல் மரத்துண்டுகள் குன்னம் வட்டத்தில், முதன்முறையாக ஓடையில் இரண்டு மீட்டர் நீளத்தில் கண்டறியப்பட்டுள்ளது ஊர் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இக் கல்மரத்தை பாதுகாத்து வருகின்ற தலைமுறைக்கு இவ்வூர் ஒரு காலத்தில் கடலாக இருந்தது என்பதற்கான சான்றாக பாதுகாக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க உள்ளதாக ஊர்மக்கள் தெரிவித்தனர். நேற்றுஇந்த புதிய கல்மரத்தை ஊர் தர்மகர்த்தா சோலை பெரியசாமி தலைமையில் ஊர் பொதுமக்கள் சேர்ந்து சீர்படுத்தினர். சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் ரமேஷ் கருப்பையா சென்று பார்வையிட்டு, கல் மரத்தை பாதுகாப்பது குறித்து கலந்துரையாடினார்.

Tags : stream ,Kunnam , Discovery of stone, perambalur, kunnam,
× RELATED குண்ணம் ஊராட்சியில் தனியார்...