×

ஊரடங்கில் தண்டவாள பராமரிப்பில் முன்னேற்றம் சரக்கு ரயில்களின் வேகம் அதிகரிப்பு

*ரயில்வே அதிகாரிகள் தகவல்

சேலம் : கொரோனா ஊரடங்கின் காரணமாக பயணிகள் ரயில் போக்குவரத்து கடந்த ஏப்ரல் மாதம் நிறுத்தி வைக்கப்பட்டது. 2 மாதத்திற்கு முன்பிருந்து முக்கிய நகரங்களுக்கிடையே சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. அதேவேளையில், மக்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்ய சரக்கு ரயில்களின் சேவை மட்டும் தொடர்ந்து இருந்து வருகிறது. ஊரடங்கு காலத்தில், காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்கள், மருத்துவ பொருட்களை பார்சல் ரயில்களில் அனுப்புவது அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு ரயில்வே மண்டலத்திலும் சரக்கு ரயில் போக்குவரத்து கடந்த 5 மாதத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட சென்னை, மதுரை, திருச்சி, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 கோட்டங்களில் இருந்து சுமார் 96 ஆயிரம் ரயில் பெட்டிகளில் சரக்குகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் இதேக்காலக்கட்டத்தை விட 35 சதவீதம் அதிகமாகும். இப்படி சரக்கு கையாள்வதில் சாதனை படைத்தது போல், சரக்கு ரயில்களின் இயக்கத்திலும் வேகத்தை அதிகரித்துள்ளனர்.

தெற்கு ரயில்வே பகுதியில் வழக்கமாக சரக்கு ரயில்கள் 70 முதல் 80 கி.மீ., வேகம் வரையில் இயக்கப்பட்டு வந்தது. இதன் வேகம் தற்போது 15 சதவீதம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. பயணிகள் ரயில் இயங்காததை பயன்படுத்தி, பல்வேறு இடங்களில் தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில், சில இடங்களில் பாதை சீரமைப்பும் செய்யப்பட்டுள்ளது. இதனால், அரக்கோணம்-ரேணிகுண்டா, சென்னை-குண்டூர், மயிலாடுதுறை-தஞ்சாவூர் உள்ளிட்ட குறிப்பிட்ட மார்க்கங்களில் சரக்கு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘‘தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து சிமெண்ட், நெல், அரிசி, இரும்பு, ஜவுளி ரகங்கள், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் உணவு பொருட்கள் வட மாநிலங்களுக்கு சரக்கு ரயில்களில் அனுப்பி வைக்கப்படுகிறது. அதேபோல், அங்கிருந்து நிலக்கரி, உரம், கோதுமை, தானிய வகைகள் கொண்டு வரப்படுகிறது. இந்த சரக்கு ரயில்கள் அனைத்தும், பயணிகள் ரயில்களின் போக்குவரத்தை கணக்கில் கொண்டு, குறிப்பிட்ட நேரத்தில் இயக்கப்படுகிறது. கடந்த 5 மாதமாக எக்ஸ்பிரஸ், மெயில் உள்ளிட்ட பயணிகள் ரயில்கள் இயக்கப்படாததால், சரக்கு ரயில்களின் போக்குவரத்தில் டிராபிக் பிரச்னையில்லை. அதேபோல், நீண்டநாட்களாக நிலுவையில் இருந்த தண்டவாள பராமரிப்பு பணிகள், பல இடங்களில் முடிக்கப்பட்டுள்ளது. அதனால், ரயில்கள் இயக்க வேகம் 15 சதவீதம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது,’’ என்றனர்.


Tags : Good's train, Train Speed,Railway Officers, lockdown restrictions
× RELATED வார விடுமுறை, முகூர்த்த நாளையொட்டி...