ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்பும் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் ரூ.500 கோடி விசைத்தறி துணி தேக்கம்

சோமனூர் : ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்ட பின்பும் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் விற்பனையாகாமல் ரூ.500 கோடி மதிப்பிலான விசைத்தறி துணிகள் தேங்கியுள்ளது. கொரோனா ஊரடங்கில் தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்ட போதிலும் விசைத்தறி தொழில் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. மேலும் விசைத்தறி துணி, ஏற்கனவே விற்பனையாகாமல் கடந்த சில மாதங்களாக தேக்கமடைந்து இருந்தன. இங்கு உற்பத்தியாகக்கூடிய 20 எஸ், 30 எஸ், 50எஸ் மற்றும் 40எஸ் உள்ளிட்ட கிரே காடா காட்டன் துணி இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றது. தூத்துக்குடி துறைமுகத்தின் வழியாக வெளி நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.

விசைத்தறி உரிமையாளர்களிடம் உற்பத்தி செய்து பெற்ற துணியை தரம் பிரித்து, சாயமிட்டு அச்சிடுவது, வெண்மைபடுத்துதல் உள்ளிட்ட பணிகளை செய்து அந்த துணிகளை உள்நாடுகளுக்கும், வெளிநாடுகளுக்கும் ஜவுளி வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். கொரோனா ஊரடங்கு அறிவித்த கடந்த மார்ச் மாதம் விசைத்தறி 30எஸ் கிரே காடா துணி மீட்டர் ரூ.29லிருந்து ரூ.28 ஆக குறைந்தது.  கடந்த மூன்று மாதங்களாக குறைந்த அளவே உற்பத்தியான துணியும் கூட விற்பனையாகாமல் தேங்கி உள்ளது. குறைந்த அளவில் விற்பனை ஆகக்கூடிய துணியும் மீட்டர் ஒன்றுக்கு 2 ரூபாய் வரை நட்டத்தில் விற்பனை செய்ய வேண்டிய நிலைமையில் உள்ளனர்.

இதனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் நஷ்டத்தை ஈடுகட்ட முடியாமல் விற்பனையை தவிர்த்து வருகின்றனர்.  இந்நிலையில் தற்போது வடமாநிலங்களில் அதிக அளவில் மழை பெய்து வருவதாலும் விற்பனையாக கூடிய சிறிதளவு ஜவுளித் துணிகளும் விற்பனையாகவில்லை. குறிப்பாக கடந்த வாரம் கோடிக்கணக்கான மீட்டர் விற்பனையாகும் என்று எதிர்பார்த்த நிலையில் ஜவுளி துணி வாங்க யாரும் வராததால் ஜவுளி உற்பத்தியாளர்கள் ஏமாற்றமடைந்தனர். இதனால் தொழில் மந்த நிலை சீரடையும் வரையில் விசைத்தறி துணி உற்பத்தியை நிறுத்த வேண்டும் என்று ஜவுளி உற்பத்தியாளர்கள் ஆலோசனை செய்து வருகின்றனர். இதனால் விசைத்தறி தொழில் நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

 கோவை, திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் நேற்று வரையில் 20 கோடி மீட்டர் கிரேட் காடா துணி விற்பனையாகாமல் தேங்கியுள்ளது. இதன் மதிப்பு ரூபாய் 500 கோடிக்கு மேல் இருக்கும் என தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதனால் பணப்புழக்கம் முழுமையாக தடைபட்டுள்ளது. ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறியாளர்கள் வழங்கக் கூடிய சம்பளம் முழுமையாக வழங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் விசைத்தறியாளர்களை நம்பியுள்ள 5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.  

இது குறித்து சோமனூரை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர் மூர்த்தி கூறுகையில், ‘கோவை, திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்து பெறப்படும் ஜவுளி துணிகளை நாங்கள் விற்கிறோம். ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்கனவே கோடிக்கணக்கான மீட்டர் துணி தேக்கமடைந்தது. இந்த நிலையில் வடமாநிலங்களில் தற்போது பெய்யும் மழையால் மேலும் ஏராளமான துணி தேக்கடைமந்து வருகிறது. இதனால் தற்காலிகமாக உற்பத்தியை நிறுத்த ஆலோசனை நடந்து வருகிறது’ என்றார்.

Related Stories:

>