பப்ஜி விளையாட முடியாமல் இன்ஜி. மாணவன் தற்கொலை: ஆந்திராவில் பரபரப்பு

திருமலை: பப்ஜி விளையாட்டுக்கு தடை செய்ததால் விரக்தியடைந்த கல்லூரி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். ஆந்திர மாநிலம். அனந்தபுரம் நகர் வருவாய் காலனியை சேர்ந்தவர் நரசிம்மா. இவரது மனைவி இமஜா ராணி. இவர்களது மகன் கிரண்குமார். இவர் சென்னை தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கொரோனா ஊரடங்கால் கல்லூரிகள் திறக்காததால் கடந்த 6 மாதங்களாக கிரண்குமார் வீட்டில் இருந்தார். அப்போது, ‘பப்ஜி’ விளையாட்டுக்கு அடிமையானாராம்.இந்நிலையில், ‘பப்ஜி’ விளையாட்டு உட்பட சீனாவின் செல்போன் ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது.  இதனால், பப்ஜி விளையாட முடியாமல் கிரண்குமார் தவித்தார். கடந்த 7ம் தேதி வீட்டிலிருந்து திடீரென மாயமானார். அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அவரை தேடினர். போலீசில் நரசிம்மா புகார் அளித்தனர்.  

நேற்று நரசிம்மாவின் வீட்டின் மொட்டை மாடியில் உள்ள ஒரு அறையில் துர்நாற்றம் வீசியது. அதன் அறைக்கதவை உடைத்து பார்த்தபோது கிரண்குமார் பேனில் தூக்குப்போட்டு சடலமாக தொங்கினார்.. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ‘பப்ஜி’ விளையாட்டை மத்திய அரசு தடை செய்ததால் கிரண்குமார் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர், அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.

Related Stories:

>