×

ஐக்கிய அரபு அமீரகத்தை தொடர்ந்து இஸ்ரேல்-பக்ரைன் அமைதி ஒப்பந்தம்: டிரம்பின் அடுத்த முயற்சியும் வெற்றி

வாஷிங்டன்: இஸ்ரேல் - ஐக்கிய அரபு அமீரகம் இடையே வரலாற்று சிறப்புமிக்க சமரச ஒப்பந்தத்தை ஏற்படுத்திய அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப், இஸ்ரேல் - பக்ரைன் இடையிலும் வரலாற்று சிறப்புமிக்க மற்றொரு அமைதி ஒப்பந்தத்தை ஏற்பட செய்துள்ளார். கடந்த 1948ம் ஆண்டு இஸ்ரேல் தனி நாடாக அறிவித்துக் கொண்டது. இதனை மத்திய கிழக்கில் உள்ள அரபு நாடுகள் ஏற்றுக் கொள்ளவில்லை. இஸ்ரேலுடன் தொடர்ந்து விரோதத்தையே வளர்த்தன. பின்னர் 1979ல் எகிப்தும், 1994ல் ஜோர்டானும் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டன. ஆனாலும், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலை ஒதுக்கியே வைத்தன. இதன் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியற்ற சூழலே நிலவி வருகிறது.

இதை சீர்படுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைதி முயற்சிகளை மேற்கொண்டார். இதன் பலனாக கடந்த மாதம் ஐக்கிய அரபு அமீரகம்- இஸ்ரேல் இடையே அமைதி ஒப்பந்தம் முடிவானது. இரு நாடுகளும் முதல் முறையாக நேரடி பயணிகள் விமான போக்குவரத்தை வெற்றிகரமாக தொடங்கின. இது டிரம்ப்பின் முயற்சிக்கு கிடைத்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாக கருதப்பட்டது. இந்நிலையில், டிரம்ப்பின் முயற்சியால் மத்திய கிழக்கில் மற்றொரு அமைதி ஒப்பந்தமும் கைகூடி உள்ளது. இஸ்ரேலுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக ஐக்கிய அரபு அமீரகத்தை தொடர்ந்து பக்ரைனும் அறிவித்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பக்ரைன் மன்னர் ஹமாத் பின் இஸா சஅல் காலிபா இடையே நடந்த ஒரு மாத பேச்சுவார்த்தைக்குப் பின் அதிபர் டிரம்ப் இதனை அறிவித்தார்.

டிரம்ப் தனது பேட்டியில், ‘‘நெதன்யாகுவும், காலிபாவும் அனைத்து துறையிலும் இருதரப்பு உறவை சுமூகமாக மேற்கொள்ள உறுதிபூண்டுள்ளனர். இரு நாடுகளும் பரஸ்பரம் நேரடி விமான போக்குவரத்து, சுகாதாரம், வர்த்தகம், தொழில்நுட்பம், கல்வி, பாதுகாப்பு மற்றும் வேளாண் துறையில் இணைந்து செயல்படவும் ஒப்புக் கொண்டுள்ளன. இன்னும் நிறைய நாடுகள் இஸ்ரேலுடன் இணைய விரைவில் வரும். இதன் மூலம். மத்திய கிழக்கில் நிலையான, பாதுகாப்பு, வளர்ச்சி உருவாகும்,’’ என நம்பிக்கை தெரிவித்தார். அடுத்த வாரம் வெள்ளை மாளிகையில் நடக்கும் பிரமாண்ட விழாவில் இஸ்ரேல்-பக்ரைன் அமைதி ஒப்பந்தமும், இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான அமைதி ஒப்பந்தமும் அந்நாட்டு தலைவர்கள் மூலம் கையெழுத்தாக உள்ளது.

செப்.11ல் அறிவிப்பு
அல்கொய்தா தீவிரவாதிகளால் நியூயார்க்கின் இரட்டை கோபுரம் தகர்த்தப்பட்டதன் 19ம் ஆண்டு நினைவு நாள் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது. அன்றைய தினத்தில் டிரம்ப் வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்த அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

நோபல் உறுதி?
இஸ்ரேல் - ஐக்கிய அரபு அமீரகம் இடையே ஏற்படுத்திய அமைதி ஒப்பந்தத்துக்காக டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கும்படி, நார்வே எம்பி பரிந்துரை செய்துள்ளார். இதைத் தொடர்ந்து, இஸ்ரேல் - பக்ரைன் இடையிலும் அவர் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தி இருப்பதால், அவருக்கு இந்த நோபல் பரிசு நிச்சயமாக கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

அமெரிக்க அதிகாரிகளுக்கு சீனா புதிய தடை
கொரோனா விவகாரம், வர்த்தக போர் போன்றவை காரணமாக அமெரிக்கா, சீனா உறவு மோசமடைந்துள்ளது. இதனால், சீன தூதரகம், சீன அதிகாரிகள், சீன வர்த்தக நிறுவனங்களுக்கு அமெரிக்கா கட்டுப்பாடுகள் மற்றும் தடைகளை விதித்து வருகிறது. இதற்கு பதிலடியாக சீனாவும் அந்நாட்டிலும், ஹாங்காங்கிலும் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக நேற்று அறிவித்தது. இதுகுறித்து சீன அரசின் செய்திதொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அமெரிக்கா தனது தவறை புரிந்து திருத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அதற்கான பதிலடி தர நாங்கள் தயாராக இருக்கிறோம்.,’ என கூறப்பட்டுள்ளது. ஆனால், என்னென்ன கட்டுப்பாடுகள் என்பது குறித்து சீனா தெளிவாக குறிப்பிடவில்லை.

Tags : United Arab Emirates ,Bahrain ,Israeli ,Trump , United Arab Emirates, Israel-Bahrain agreement, Trump
× RELATED துபாயில் இந்தியர்களுக்கு புதிய...