×

என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்ட ரவுடி சங்கர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் விசாரணை

பெரம்பூர்:  என்கவுன்டரில் கொல்லப்பட்ட சங்கரின் வீட்டுக்கு நேரில் சென்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். அயனாவரம் நியூ ஆவடி சாலையில் கடந்த மாதம்  21ம் தேதி ரவுடி சங்கர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். அயனாவரம் காவல் ஆய்வாளர் நடராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த என்கவுன்டர் திட்டமிட்ட படுகொலை என சங்கரின் தாயார் கோவிந்தம்மாள் மற்றும் சங்கரின் உறவினர்கள்  குற்றம் சாட்டினர்.  இதனையடுத்து வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதன்பின்  உதவி ஆணையர் ராஜா, காவல் ஆய்வாளர் நடராஜ், உதவி ஆய்வாளர் யுவராஜ், காவலர்கள் முபாரக் வடிவேல், ஜெயப்பிரகாஷ் மற்றும் முருகன் ஆகிய 7 பேர்  விசாரணைக்கு சிபிசிஐடி போலீசார் முன்னிலையில் ஆஜராகினர். இவர்களிடம் தனித்தனியே விசாரணை நடத்தப்பட்டது. மேலும் விசாரணை விவரம்  அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக அயனாவரம் பெண் காவலர் ஜெயந்தி, ஆய்வாளர்களின் டிரைவர்கள் காமேஷ், முத்துகுமார், பழனி மற்றும் சாட்சிகளான கார்த்திக் மற்றும் பசுபதி உள்ளிட்ட 6 பேர்  சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகினர். துணை கண்காணிப்பாளர்  கண்ணன் முன்னிலையில், சுமார் 4 மணி நேரம் விசாரணை நடந்தது.

இந்நிலையில் நேற்று சிபிசிஐடி அலுவலகத்தில் சங்கரின் தாயார் கோவிந்தம்மாள், சகோதரி ரேணுகா, அவரது மகன் மோகன், மற்றும் உறவினர் உஷா ஆகிய 4 பேரும் ஆஜராகி சுமார் ஒன்றரை மணி நேரம் தங்கள் விளக்கத்தை அளித்துவிட்டு வீடு திரும்பினர். பின்னர், துணை கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் அயனாவரம் பகுதியில் அமைந்துள்ள சங்கரின் வீட்டிற்கு சென்று சுமார் 3 மணிநேரம் விசாரணை செய்தனர். அக்கம் பக்கம் வீடுகளில் உள்ளவர்களிடமும்  விசாரணை நடத்தப்பட்டது.  அதன் பின்பு அனைவரும் மேட்டுத் தெருவில் உள்ள கஞ்சா வியாபாரி  ராணியின்  வீட்டிற்குச் சென்றனர்.  கடந்த இரண்டு மாதமாக வீடு பூட்டப்பட்டு உள்ளதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கிருந்து சென்றனர்.

சமீபத்தில் வெளியான சங்கரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் சங்கரின் உடலில் அதிகப்படியான காயங்கள் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே இந்த வழக்கு மேலும் சூடுபிடித்துள்ளது. இதேபோல், சங்கர் என்கவுன்டர் செய்யப்பட்ட தினத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும்  ராணி,  திலீப், தினகரன் ஆகியோரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரிக்க உள்ளனர். இந்த வழக்கின் முக்கிய திருப்பமாக கடந்த ஆண்டு அயனாவரத்தில் மாமியாரை கடத்திய வழக்கில் கைதான மேனகாவிடம் சிபிசிஐடி போலீசார் விசாரிக்க உள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது.


Tags : house ,CBCID ,Rowdy Shankar ,encounter , In the encounter, shot dead, Rowdy Shankar, CPCIT, interrogation
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்