×

விமானத்துக்குள் விதிமுறையை மீறி புகைப்படம் எடுக்க அனுமதிக்கும் விமானங்களுக்கு 2 வாரம் தடை: மத்திய இயக்குனரகம் எச்சரிக்கை

புதுடெல்லி: ‘விமானத்திற்குள் யாராவது போட்டோ எடுப்பது தெரிய வந்தால், குறிப்பிட்ட அந்த விமானம் அந்த வழித்தடத்தில் பறக்க மறுநாள் முதல் இரண்டு வாரங்களுக்கு தடை விதிக்கப்படும்,’ என மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் எச்சரித்துள்ளது.  கடந்த புதனன்று சண்டிகரில் இருந்து மும்பை வந்த இண்டிகோ தனியார் விமானத்தில் நடிகை கங்கனா ரனாவத் பயணித்தார். அப்போது, அந்த விமானத்தில் இருந்த பத்திரிகையாளர்கள், புகைப்பட கலைஞர்கள் பாதுகாப்பு விதிகளை மீறி, சமூக விலகலை கடைபிடிக்காமல் அவரைப் புகைப்படம் எடுத்தனர். இது சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியானது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இண்டிகோ விமான நிறுவனத்திற்கு, விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, டிஜிசிஏ நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘விதிமுறைகளை மீறி விமானத்திற்குள் பயணிகள் உள்ளிட்டோர் புகைப்படம் அல்லது வீடியோ எடுத்தது தெரிய வந்தால், அந்த விமானம்,  குறிப்பிட்ட அந்த வழித்தடத்தில் மறுநாள் முதல் இரு வாரங்கள் பறக்க தடை விதிக்கப்படும். விமான விதி 1937, விதி எண் 13ன் கீழ் விமானத்தில் பயணிக்கும் எந்த பயணியும் விமானத்திற்குள் புகைப்படம் எடுக்கக்கூடாது. விமான போக்குவரத்து அமைச்சகம், டிஜிசிஏ அனுமதியின்றி புகைப்படம் எடுக்க தடை விதித்துள்ளது. இந்த விதிமுறைகள் இருந்த போதிலும், சில நேரங்களில் விமான நிறுவனங்கள் இந்த நிபந்தனைகளை பின்பற்ற தவறி விடுகின்றன. இதைத் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பதில்லை. விதிகளை மீறி புகைப்படம் எடுத்த நபர் மீது விமான நிறுவனம் நடவடிக்கை எடுத்த பின்னரே, அந்த விமானம் பயணிக்க அனுமதிக்க முடியும்,’ என கூறப்பட்டது.

Tags : flights ,Federal Directorate , In-flight, regulation, photo, for flights, 2 week ban
× RELATED போதிய பயணிகள் இல்லாததால் சென்னை-டெல்லி இடையே 2 விமான சேவைகள் ரத்து