×

இங்கிலாந்துடன் முதல் ஒருநாள்: ஆஸ்திரேலியா அபார வெற்றி: சாம் பில்லிங்ஸ் சதம் வீண்

மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில்,  ஆஸ்திரேலியா 19 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசியது. ஆஸ்திரேலியா 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 294 ரன் குவித்தது. கேப்டன் பிஞ்ச் 16, ஸ்டாய்னிஸ் 43, லாபுஷேன் 21, ஸ்டார்க் 19* ரன் எடுத்தனர். மிட்செல் மார்ஷ் - கிளென் மேக்ஸ்வெல் ஜோடி 6வது விக்கெட்டுக்கு 126 ரன் சேர்த்து அசத்தியது. மிட்செல் மார்ஷ் 73 ரன் (100 பந்து, 6 பவுண்டரி), மேக்ஸ்வெல் 77 ரன் (59 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினர். இங்கிலாந்து பந்துவீச்சில் ஆர்ச்சர், மார்க் வுட் தலா 3, ரஷித் 2, வோக்ஸ் 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 275 ரன் எடுத்து 19 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. சாம் பில்லிங்ஸ் 118 ரன் (110 பந்து, 14 பவுண்டரி, 2 சிக்சர்), ஜானி பேர்ஸ்டோ 84 ரன் (107 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்), கேப்டன் இயான் மோர்கன் 23 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். ஆஸி. பந்துவீச்சில் ஆடம் ஸம்பா 4, ஹேசல்வுட் 3, கம்மின்ஸ், மிட்செல் மார்ஷ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 10 ஓவரில் 3 மெய்டன் உட்பட 26 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றிய ஹேசல்வுட் ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.



Tags : win ,England ,Australia ,Sam Billings , With England, one day, Australia, tremendous win, Sam Billings
× RELATED 3வது வெற்றிக்காக முட்டி மோதும் மும்பை – பஞ்சாப்