×

யுஎஸ் ஓபன் டென்னிஸ் பைனலில் ஸ்வெரவ்-தீம்

நியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில்  ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ், ஆஸ்திரியாவின் டொமினிக்  தீம் மோத உள்ளனர். முதல் அரையிறுதியில் ஸ்பெயின் வீரர் பாப்லோ கரினோ புஸ்டாவுடன் (20வது ரேங்க்) மோதிய ஸ்வெரவ் (5வது ரேங்க்) முதல் 2 செட்களையும் 3-6, 2-6 என்ற கணக்கில் இழந்து பின்தங்கினார். இதனால் புஸ்டா அடுத்த செட்டையும் வென்று முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்த 3 செட்களிலும் சுதாரித்துக் கொண்டு வேகம் காட்டிய ஸ்வெரவ் தொடர்ந்து 6-3, 6-4, 6-3 என கைப்பற்றி பைனலுக்குள் நுழைந்தார். இந்தப்போட்டி 3மணி 23 நிமிடங்கள் நீடித்தது. சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு யுஎஸ் ஓபன் பைனலுக்கு முன்னேறிய ஜெர்மனி வீரர் என்ற பெருமையை ஸ்வெரவ் பெற்றுள்ளார். கடைசியாக 1996ல் ஜெர்மனி வீரர் போரிஸ் பெக்கர் இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார்.
2வது அரையிறுதியில்  ரஷ்யாவின் டானில் மெட்வேதவ் (3வது ரேங்க்),  ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் (2வது ரேங்க்) ஆகியோர் மோதினர்.

முதல் செட்டில் அதிரடியாக விளையாடிய தீம் 6-2 என வென்று முன்னிலை பெற்றார். ஆனால், அடுத்த 2 செட்களும் கடும் போராட்டமாக இருந்தன. இரு வீரர்களும் விடாப்பிடியாகப் போராடியதால் டை பிரேக்கர் வரை இழுபறியாக நீண்ட நிலையில், தீம் 6-2, 7-6 (9-7),7-6 (7-5) என்ற நேர் செட்களில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 56 நிமிடத்துக்கு நீடித்தது. இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் ஸ்வெரவ் - தீம் மோதுகின்றனர். இருவருக்கும் இதுதான் முதல் கிராண்ட் ஸ்லாம் இறுதிப்போட்டி. ஆகவே  யார் வென்றாலும் யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் தொடரின் புதிய சாம்பியனாவார்கள். கூடவே கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை முதல்முறையாக வென்ற வரலாற்றிலும் இடம் பிடிப்பார்கள். லாரா - வேரா சாம்பியன்: மகளிர் இரட்டையர் பிரிவு பைனலில் ஜெர்மனியின் லாரா சீஜ்மண்ட் - வேரா ஸ்வோனரிவா (ரஷ்யா) ஜோடி 6-4, 6-4 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் நிகோல் மெலிசர் - யிபான் ஸூ (சீனா) ஜோடியை வீழ்த்தி கோப்பையை முத்தமிட்டது.


Tags : tennis final ,US Open , Swerve-theme, US Open tennis, final
× RELATED அபுதாபி ஓபன் காலிறுதியில் ஆன்ஸ்