×

சோனியாவின் மாஸ்டர் பிளான் ராகுல் ஆதரவாளர்களுக்கு பதவி: தலைமை மாற்றம் விரைவில் வருமா?

புதுடெல்லி: காங்கிரஸ் தலைமை குறித்து சமீபத்தில் கட்சிக்குள் சர்ச்சை எழுந்தது. 23 மூத்த தலைவர்கள் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தினர். இந்த நிலையில், கட்சி அமைப்பில் சோனியா காந்தி நேற்று முன்தினம் இரவு பல்வேறு அதிரடி மாற்றங்களை அறிவித்தார். மூத்த தலைவர்கள் பலர், குறிப்பாக கட்சி தலைமை குறித்து அதிருப்தி கடிதம் எழுதிய தலைவர்கள் மாற்றப்பட்டு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டன. குலாம் நபி ஆசாத், கபில் சிபல், சசி தரூர், மணிஷ் திவாரி ஆகியோர் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். இவர்களுக்கு பதிலாக தாரிக் அன்வர், ரன்தீப் சுர்ஜிவாலா, கே.சி.வேணுகோபால், அஜய் மகான், ஜிதேந்திர சிங், உள்ளிட்டோர் புதிய பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர். இதே போல், காங்கிரஸ் காரிய கமிட்டியிலும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் ராகுலின் நெருங்கிய ஆதரவாளர்கள்.
* காங்கிரஸ் காரிய கமிட்டியில் உள்ள 23 நிரந்தர அழைப்பாளர்களில் 11 பேர் ராகுலுக்கு நெருக்கமானவர்கள்.
* இக்கமிட்டியின் நிரந்தர உறுப்பினர்கள் 22 பேரில் கே.சி.வேணுகோபால், ரன்தீர் சுர்ஜிவாலா, அஜய் மகான், ஜிதேந்திர சிங், ஆர்.எஸ்.மீனா ஆகியோரும் ராகுலின் வலதுகரங்களாக இருப்பவர்கள்.
* காரிய கமிட்டியில் 9 சிறப்பு அழைப்பாளர்களில் 7 பேர் ராகுலின் விசுவாசிகள்.
* பல்வேறு மாநிலங்களுக்கு நியமிக்கப்பட்ட 17 மேலிட பொறுப்பாளர்களில் 13 பேர் ராகுலின் பேச்சை தட்டாதவர்கள்.
* பொதுச் செயலாளர்களிலும் ராகுலின் ஆதரவாளர்களே அதிகம்.
எனவே, இந்த மாற்றத்தை செய்ததன் மூலம் கட்சிக்கு எதிரான கருத்துக்களின் ஆதிக்கத்தை குறைத்த சோனியா, அதே சமயம் ராகுலின் பலத்தை அதிகரித்ததோடு, புதிய தலைமுறைக்கான மாற்றத்தையும் தொடங்கி வைத்திருப்பதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் மூலம்,  அடுத்த தலைவராக ராகுல் பொறுப்பேற்தற்கான அடித்தளத்தை சோனியா வலுவாகவே அமைத்துள்ளார்.
இந்த மாற்றத்தின் மூலம், மூத்த அனுபவம், நெருக்கமானவர்கள், இளம் தலைமுறையினர் என்ற சமமான ஆற்றலை கட்சியில் புகுத்தி இருக்கிறார் சோனியா காந்தி என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

அமெரிக்கா சென்றார் சோனியா
தற்போது 73 வயதாகும் சோனியா காந்தி, அடிக்கடி அமெரிக்கா சென்று மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்வது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக அவர் அமெரிக்கா செல்ல முடியவில்லை. அதனால், அவருக்கு நடத்தப்பட வேண்டிய வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் நிலுவையில் இருக்கின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கட்சியில் அதிரடி மாற்றங்களை செய்த கையோடு, நேற்று காலை அவர் அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. ‘இதன் காரணமாக, நாளை முதல் தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் அவர் கலந்து கொள்ள மாட்டார். இம்மாத கடைசியில் திரும்பி பிறகு, ஓரிரு நாட்கள் மட்டுமே இத்தொடரில் பங்கேற்பார்,’ என்று அந்த வட்டாரங்கள் மேலும் கூறின.

Tags : Sonia ,supporters ,Rahul , Sonia, Master Plan, Rahul, post for supporters
× RELATED மக்களவைத் தேர்தலுக்கான வாக்குறுதிகள்...