×

1 லட்சத்துக்கு ஒரே ஆண்டில் ரூ.4 லட்சம் தருவதாக கூறி ரூ.4,700 கோடி மோசடி செய்த கோவையை சேர்ந்தவர் கைது: தமிழகம், கேரளாவில் கைவரிசை காட்டியவர் சேலத்தில் சிக்கினார்

சேலம்: தமிழ்நாடு, கேரளாவில் முதலீடு செய்யும் பணத்தை 4 மடங்காக தருவதாக கூறி ₹4,700 கோடி மோசடி செய்த கோவையை சேர்ந்தவரை சேலம் போலீசார் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். அவரிடம் மோசடி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை பீளமேடு பிஆர்.புரத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன் கௌதம் ரமேஷ் (40). இவர், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தமிழ்நாடு, கேரளாவில் பல்வேறு இடங்களில் யுனிவர்சல் யுனைட்டடு டிரேடிங் சொல்யூசன்ஸ் என்பது உட்பட 3 நிதி நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்த நிதி நிறுவனங்களில் ஒரு லட்சம் முதலீடு செய்தால், ஓராண்டில் 4 மடங்காக ₹4 லட்சம் திருப்பி தரப்படும் என விளம்பரப்படுத்தி, ஆயிரக்கணக்கான மக்களிடம் இருந்து முதலீடு பெற்றதாக கூறப்படுகிறது. கேரளாவில் மட்டும் 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அங்கு நிறுவனங்களை மூடிவிட்டு, கௌதம் ரமேஷ் தலைமறைவாகியுள்ளார்.

இதுபற்றி கேரள போலீசில், ஏமாந்த மக்கள் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து, கௌதம் ரமேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் 13 பேரை தேடி வந்தனர். இந்நிலையில் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் கௌதம் ரமேஷ் மீது ஆயிரக்கணக்கானோர் மோசடி புகார் கொடுத்தனர். இதையடுத்து அவர்களும் தேடி வந்தனர். இதனிடையே சேலத்தை சேர்ந்த 70 பேர், மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமாரிடம் கௌதம் ரமேஷ், ₹4.50 கோடி அளவுக்கு மோசடி செய்து விட்டதாக புகார் கொடுத்தனர். இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, சேலத்தில் பதுங்கி இருந்த கௌதம் ரமேஷை நேற்று சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், தமிழகத்தில் கோவை, சேலம், கரூர், தர்மபுரி என பல்வேறு இடங்களில் ₹1,200 கோடி வரை மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதில் கௌதம் ரமேசுடன், மேலும் 13 பேர் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தலைமறைவாகியுள்ளனர். கடந்த 2018-19ல் கோவையில் உள்ள கௌதம் ரமேசின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி ₹78 கோடியை பறிமுதல் செய்துள்ளனர்.

பிறகு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து, ஏமாந்தவர்களுக்கு பணத்தை மீட்டு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில், 410 பேருக்கு மட்டுமே பணம் கொடுக்க வேண்டியுள்ளதாக அவர் கூறியுள்ளார். ஆனால், அங்கு 7,500க்கும் மேற்பட்டோர் ஏமாந்துள்ளனர். இதேபோல்,கேரளாவில் ₹3,500 கோடிக்கு மோசடி செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. சேலம் போலீசில் சிக்கிய கௌதம் ரமேசிடம் விசாரிக்க கேரள போலீசார் இன்று சேலம் வருகின்றனர். கோவை, கரூர், தர்மபுரி போலீசாரும் விசாரிக்கவுள்ளனர். சேலம் போலீசார், அவரது பெயரில் உள்ள சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். கூட்டாளிகள் 13 பேரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Coimbatore , Rs 4,700 crore, fraud, Coimbatore, Tamil Nadu, Kerala, handcuffs
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...