×

இலங்கைக்கு கடத்த முயன்ற ஒரு டன் மஞ்சள் பறிமுதல் மண்டபத்தில் 3 பேர் கைது

* தங்கக்கட்டிகளாக கொண்டு வர திட்டம்
* போலீசார் விசாரணையில் ‘திடுக்’ தகவல்

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கடலோர பகுதியில் இருந்து மன்னார் வளைகுடா கடல் வழியாக படகில், அதிகளவில் கடல் அட்டை, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் இலங்கைக்கு கடத்திச் செல்லப்படுகிறது.
நேற்று மண்டபம் வேதாளை கடற்கரை பகுதியில் இருந்து, இலங்கைக்கு மஞ்சள் மூட்டைகள் கடத்தப்பட உள்ளதாக தகவல் கிடைத்ததால், மரைன் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடற்கரையில் சந்தேகப்படும்படி வெளியூர் சரக்கு வேன் சாக்கு மூட்டைகளை ஏற்றி வந்தது. போலீசார் வேனை நிறுத்தி சோதனை செய்ததில், அதிலிருந்த மூட்டைகளுக்குள் 1,020 கிலோ மஞ்சள் இருந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.5 லட்சம். மஞ்சள் மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், வேனில் இருந்த டிரைவர் மற்றும் 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.

இதில் ஈரோட்டில் இருந்து இலங்கைக்கு வேனில் மஞ்சள் மூட்டைகளை கடத்தி வந்ததாக ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த டிரைவர் வெங்கடேஷ்(30) தெரிவித்தார். மேலும், வேனில் இருந்த ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே வேதாளை ரியாஸ்(36), சகிபுல்லா(40) ஆகியோர் மஞ்சள் மூட்டைகளை மன்னார் வளைகுடா கடல் வழியாக படகில் இலங்கைக்கு கடத்த திட்டமிட்டதாகவும், இலங்கையில் மஞ்சளை கொடுத்து விட்டு பணத்திற்கு பதிலாக தங்கக்கட்டிகளை வாங்கி வர முடிவு செய்து இருந்ததாகவும் தெரிவித்தனர். வேனுடன் மஞ்சள் மூட்டைகளை பறிமுதல் செய்த மரைன் போலீசார், டிரைவர் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர்.

Tags : Sri Lanka , Sri Lanka, attempted, confiscated a ton of turmeric, 3 arrested
× RELATED போலி பாஸ்போர்ட் மூலம் சென்னையில்...