×

இன்று நடக்கும் நீட் தேர்வுக்கு பயந்து மூன்று மாணவர்கள் தற்கொலை: மதுரை, தர்மபுரி, திருச்செங்கோட்டில் அடுத்தடுத்து நடந்த சம்பவங்களால் பரபரப்பு

மதுரை: நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடக்கிறது. இந்த நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு பயந்து நேற்று ஒரே நாளில் மதுரையை சேர்ந்த மாணவி, தர்மபுரி, திருச்செங்கோடைச் சேர்ந்த 2 மாணவர்கள் என அடுத்தடுத்து 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.  இந்தியாவில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் எனப்படும் நுழைவுத்தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் கடந்த 2016ல் சில மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 2017 முதல் இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடந்து வருகிறது. அதே நேரம், நீட் தேர்வு பயத்தால் தமிழகத்தில் மாணவ, மாணவிகளின் தற்கொலை தொடர்கிறது. அரியலூர் அனிதா, விழுப்புரம் பிரதீபா, சேலையூர் ஏஞ்சலின், திருவள்ளூர் ஸ்ருதி, திருப்பூர் ரிதுஸ்ரீ, தஞ்சாவூர் வைஷியா, நெல்லை தனலட்சுமி, கோவை சுபஸ்ரீ என நீட் மரணங்கள் தொடர்கின்றன. கடந்த சில நாட்களுக்கு முன், நீட் தேர்வுக்கு தயாரான அரியலூரைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ் மன உளைச்சலால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தின் அதிர்ச்சி அலை ஓய்வதற்குள், மதுரையில் எஸ்ஐ மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 மதுரை பட்டாலியனில் எஸ்ஐ ஆக பணியாற்றுபவர் முருகுசுந்தரம். இவரது மனைவி அபிராமி, வேளாண்மைத்துறையில் பணிபுரிந்து வருகிறார். தல்லாகுளம் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். மகள் ஜோதி ஸ்ரீதுர்கா(19). மகன் ஸ்ரீதர். பத்தாம் வகுப்பு மாணவர். பிளஸ் 2 முடித்த ஜோதி ஸ்ரீதுர்கா டாக்டராகும் லட்சியத்தில், கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதினார். ஆனால், போதுமான மார்க் கிடைக்கவில்லை. இதனால், வேறு பட்டப்பிடிப்பில் கூட சேராமல் மீண்டும் நீட் நுழைவுத்தேர்வுக்கு தயாராகி வந்தார். இன்று  நீட் தேர்வு நடைபெறுவதையொட்டி, கடந்த ஒரு வாரமாகவே சரியான தூக்கமின்றி தீவிரமாக படித்து வந்தார். நேற்று அதிகாலை 1 மணி வரை படித்தவர், திடீரென தோல்வி பயத்தில் வீட்டிலுள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த தல்லாகுளம் போலீசார் மாணவி ஜோதி துர்காவின் உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து, நேற்று மதியம் பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. அவர் உருக்கமாக எழுதிய கடிதம், பேசிய ஆடியோவும் சிக்கி உள்ளது. இதையடுத்து நேற்று பிற்பகலில் மாணவியின் உடல் மதுரையில் தகனம் செய்யப்பட்டது. இச்சம்பவம் தமிழக அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாணவன் தற்கொலை: தர்மபுரி செந்தில்நகரைச் சேர்ந்தவர் மணிவண்ணன். விவசாயத்திற்கான பழைய டிராக்டர் வாங்கி விற்பவர். இவரது மனைவி ஜெயசித்ரா. இந்த தம்பதியின் ஒரே மகன் ஆதித்யா(20). அங்குள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு வரை படித்துள்ளார். பின்னர், 12ம் வகுப்பை 2018ல் நாமக்கல்லில் உள்ள ஒரு பள்ளியில் முடித்துள்ளார். இதையடுத்து, டாக்டராகும் ஆசையில் அந்த ஆண்டே நீட் தேர்வு எழுதியுள்ளார். அதில், தோல்வியை தழுவியதால் மீண்டும் கடந்த ஆண்டு 2வது முறையாக நீட் தேர்வில் பங்கேற்று குறைந்த மதிப்பெண்களே பெற்றுள்ளார். இதையடுத்து, 3வது முறையாக இந்தாண்டு இன்று தேர்வெழுத விண்ணப்பித்திருந்தார். இதற்காக படித்துக் கொண்டே இருந்துள்ளார். நேற்று மாணவரின் பெற்றோர் நீட் தேர்வு மையத்தை பார்ப்பதற்காக சொந்த ஊரான சேலம் மாவட்டம் பூசாரிப்பட்டிக்கு புறப்பட்டு சென்றனர். வீட்டில் தனியாக இருந்த ஆதித்யாவுக்கு திடீரென தேர்வு பயம் வந்துள்ளது. இந்த ஆண்டும் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் நேற்று மாலை வீட்டில் தூக்கில் தொங்கினார். மாலை 6 மணியளவில் வீடு திரும்பிய பெற்றோர் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருப்பதை கண்டு திடுக்கிட்டனர்.  ஜன்னல் வழியாக பார்த்தபோது, உள் அறையில் மின்விசிறியில் புடவையால் தூக்கிட்ட நிலையில் ஆதித்யா தொங்கிக்கொண்டிருந்ததை கண்டு கதறித் துடித்தனர்.

 சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டு வந்து, கதவை உடைத்து உள்ளே சென்று ஆதித்யாவை மீட்டனர். அப்போது அவர் இறந்துவிட்டது தெரிய வந்தது. ஒரே மகனின் சடலத்தை பார்த்து தாயார் ஜெயசித்ரா, ‘உன்னை இந்த நிலையில் பார்ப்பதற்காகவா  பாலூட்டி, சீராட்டி வளர்த்தேன்’ என கூறி மார்பில் அடித்தவாறு கதறியது அப்பகுதியினரையும் கண் கலங்கச் செய்தது. தகவலின்பேரில், மாவட்ட எஸ்பி பிரவேஷ்குமார் மற்றும் தர்மபுரி டவுன் போலீசார் விரைந்து சென்று, மாணவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கு முன்பாக மாணவர் எழுதியிருந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு மலை சுற்றி ரோடு இடையன்பரப்பு பகுதியை சேர்ந்தவர் முருகேசன்(47). எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர். இவரது மனைவி கோமதி. இவர்களுக்கு மோதிலால்(21), சந்தோஷ்(15) என்ற இரு மகன்கள். இதில் மோதிலால் பிளஸ்2 முடித்து விட்டு, நீட்தேர்வுக்கு படித்து வந்தார். சந்தோஷ் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இன்று நீட் தேர்வு நடைபெற  உள்ள நிலையில், நேற்று இரவு 8.30 மணியளவில் வீட்டில் இருந்த மாணவன் மோதிலால், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாணவி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி வழங்கி உதயநிதி ஸ்டாலின் ஆறுதல்
நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்த மாணவி ஜோதிதுர்காயின் குடும்பத்தினரை சந்திக்க விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே புளியம்பட்டியில் உள்ள வீட்டிற்கு நேற்று திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார். திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினார். பின்னர் அவர் கூறுகையில், அதிமுக அரசு, மோடியிடம் அடிமையாக உள்ளது. ஆண்டுதோறும் மாணவர்கள் தற்கொலை செய்து வரும் நிலையில் இதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது, மாணவர்கள் தைரியமாக இருக்க வேண்டும் என்று சொல்வதற்கு ஒரு முதல்வர் தேவையா? மாணவர்களின் தொடர் போராட்டத்தால், ஜல்லிக்கட்டு பிரச்னைக்கு ஒரே நாளில் தீர்வு கிடைத்தது. அப்போது செய்ய முடிந்ததை இப்போது செய்ய முடியாதா? நீட் தேர்வுக்கு பல லட்சம் செலவழித்து படிக்கின்றனர். பின் எதற்கு பிளஸ் 2 தேர்வு? அந்த மதிப்பெண்ணிற்கு என்ன பயன்? இன்னும் 8 மாதத்தில் ஆட்சி மாறி நல்ல முடிவு ஏற்படும். நீட் தேர்வை ரத்து செய்யும் வரை திமுக தொடர்ந்து போராடும் என்றார்.

ஸாரி அப்பா... ஸாரி அம்மா... என்னை பத்தி கவலைப்படாதீங்க... மாணவியின் ஆடியோ பேச்சு
முன்னதாக மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா செல்போன் ஆடியோவில் பேசியுள்ளார். அவரது பேச்சிலிருந்து, ‘‘அப்பா, யாரையும் பிளேம் பண்ணாதீங்க... இது யாரோட தப்பும் இல்லை.. நான் நல்லாத்தான் படிச்சேன்... ஆனா பயமா இருக்கு. ஒருவேளை நான் பெயிலாயிட்டேன்னா.. பெயிலாக மாட்டேன்னாலும்.. பயமா இருக்கு. ஒருவேளை சீட் கிடைக்கலைன்னா? நீங்க எல்லோருமே ஏமாந்துருவீங்க. ஸாரி அப்பா... ஸாரி அம்மா, டாட்டா.. தயவு செஞ்சு சேடா இருக்காதீங்க, தர் இருக்கான். அவனை நல்லா பார்த்துங்குங்க.. அவனை நல்லா படிக்க வைங்க... பை தர்... ஐ ஆம் சாரி... ஐலவ்யு அம்மா... ஸாரி அப்பா, ப்ளீஸ் உங்க ஹெல்த்தை நல்லா பார்த்துகுங்க.. நீங்க ஹார்ட் பேஷன்ட்.. என்னைப்பத்தி ரொம்ப  கவலைப்படாதீங்க... எல்லோருமே எங்கிட்ட ரொம்ப எக்ஸ்ெபக்ட் பண்ணினீங்க.. எனக்குத்தான் ரொம்ப பயமா இருக்கு... உங்களோட தப்பு ஏதும் இல்லை.. இது என்னோட டெசிசன்தானே சாரி... எனக்கு ரொம்ப ஹேப்பியான பேமிலி கிடைச்சிருக்கு.. எனக்குத்தான் அதை பாதுகாக்கத் தெரியல.. பை அம்மா...உங்களை மிஸ் செய்வேன்...  அம்மா ஸாரி.. என’’ தழுதழுக்கும் குரலுடன் மாணவியின் பேச்சு முடிகிறது.

‘நீட் தேர்வால் மகளை பறி கொடுத்து விட்டேனே...’ எஸ்ஐ கண்ணீர் பேட்டி
ஜோதி ஸ்ரீதுர்காவின் தந்தை முருகுசுந்தரம் கூறும்போது, ‘‘என் மகள் கடந்தாண்டு நீட் தேர்வு எழுதியபோது மார்க் சரியாக கிடைக்கவில்லை. கல்லூரிக்கு செல்ல விரும்பாமல் முழுநேரமாக நீட் பயிற்சிக்கு செல்கிறேன் எனக்கூறி விரகனூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் பயிற்சி வகுப்பில் படித்தார். கடந்த வாரம் நடந்த பயிற்சித்தேர்வில் 560க்கும் அதிக மார்க் எடுத்தார். இரவில் படிக்கும் அவருக்கு அதிகாலை 4.30 மணிக்கு நான் டீ போட்டு கொடுப்பது வழக்கம். அதுபோல் அதிகாலையில் டீ போட்டுக் கொண்டு அவரது அறைக்கு சென்று பார்த்தபோது கதவுகள் மூடியிருந்தது. சந்தேகப்பட்டு ஜன்னல் வழியாக பார்த்தபோது தான், தூக்கில் இறந்து கிடந்தது தெரிந்தது. முதல் நாள் வரை நீட் தேர்வு எழுத பயமாக இருப்பதாகக் கூறி வந்தார். நானும், ஆறுதல் கூறி நீ வெற்றி பெறுவாய் என தைரியம் கொடுத்து படிக்க வைத்தேன். கடைசியில் நீட் தேர்வால் எனது மகளின் உயிரை பறி கொடுத்தது தான் மிச்சம்’’ என கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

‘நான் சோர்ந்து விட்டேன்...’: 5 பக்க கடிதத்தில் மாணவி உருக்கம்

ஜோதி ஸ்ரீதுர்கா தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதியுள்ள 5 பக்க கடிதம் விவரம்:  ‘‘அப்பா... மறக்காம மருத்துவ செக்கப்புக்கு போங்க... வழக்கம்போல சந்தோஷமாக இருங்க... உங்களை சுற்றியிருப்பவர்களையும் சந்தோஷமாக வைத்திருங்கள்... அது உங்களால் மட்டும் தான் முடியும். உங்களுக்கு என்னை மிகவும் பிடிக்கும்... நான் உங்களை விட்டு செல்கிறேன் அப்பா. நான் உங்களுக்கு நிறைய விஷயங்களை சொல்ல ஆசைப்படுகிறேன். ஆனால் அதற்கு இப்போது நேரம் இல்லை. தம்பி தர். எனக்கு உன்னை மிகவும் பிடிக்கும் என்பது தெரியும். என்னை மன்னித்து விடு. நீ தான் சிறந்த சகோதரன். நான் ஒரு கோழை. உனது அன்புக்கும் மரியாதைக்கும் நான் தகுதியில்லாதவள். அப்பா, அம்மாவை நன்றாக பார்த்துக் கொள். எனக்காக அழ வேண்டாம். அம்மா, அப்பா கூட நீ மட்டும் தான் இப்போ இருக்கே. நீ சோகமாக இருந்தால் அவர்களும் சோகமாகி விடுவார்கள். நன்றாக படி. என்னை மறந்து விடு.

நீ இரக்க குணம் கொண்டவன். நன்றாக படி. பொறுமையாக இரு. முட்டாள்தனமாக எதையும் வீணடித்து விடாதே. நீ எனக்காக எதையும் செய்தாய். எனக்கு ஆதரவாக இருந்தாய். நான் உன்னை விட்டு செல்வதற்காக என்னை மன்னித்துவிடு.
 நான் உண்மையில் நன்றாக படித்தேன். ஆனால் எனக்கு பயமாக இருக்கிறது. நான் நீட் தேர்வில் தோல்வியடைந்து விட்டால் அனைவரையும் அதிருப்திக்குள்ளாக்கி இருப்பேன். அம்மா, ஸ்ரீதரையும் பார்த்துக் கொள். எனது இறப்பு, இது யாருடைய தவறும் அல்ல. யாரும் யாரையும் குற்றம் சாட்டிக் கொள்ளாதீர்கள். அம்மு, நீ தான் என் தோழி. மாமா, அத்தை தாத்தா, பாட்டி அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள். என் மேல் நீங்கள் நிறைய எதிர்பார்ப்புகளை வைத்திருந்தீர்கள். ஒரு வேளை எனக்கு மெடிக்கல் சீட் கிடைக்காவிட்டால் உங்கள் கஷ்டமெல்லாம் வீணாகி இருக்கும். நான் சோர்ந்து விட்டேன்...’’ - இப்படி உருக்கத்துடன் எழுதியுள்ளார்.

நீட் தேர்வு பலி கொண்ட 12 மாணவர்கள்

நீட் தேர்வால் தமிழகத்தில் இதுவரை 12 மாணவ, மாணவிகள் பலியாகி உள்ளனர். அதன் விவரம்:

1அனிதா: அரியலூர் மாவட்டம் குழுமூரை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி சண்முகம் மகள் அனிதா, 2017ல் பிளஸ் 2 தேர்வில் 1176 எடுத்தும், நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்ததால் டாக்டராகவும் கனவு பாழானதே என நினைத்து தற்கொலை செய்து கொண்டார். இவர்தான் நீட் தேர்வு வாங்கிய முதல் பலி.
2சுபஸ்ரீ: திருச்சி சமயபுரம், திருவள்ளுவர் நகரை சேர்ந்த கண்ணன் மகள் சுபஸ்ரீ, பிளஸ் 2வில் 907 வாங்கியும் 2018 நீட் தேர்வில் வெறும் 24 மதிப்பெண்களே பெற்றதால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்தார்.
3ரிதுஸ்ரீ: தேனி மாவட்டம் தி.ஆண்டிபட்டி சொந்த ஊராக இருந்தும் திருப்பூர் வெள்ளியங்காட்டில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்த தம்பதியான செல்வராஜ்-ராஜலட்சுமி மகள் ரிதுஸ்ரீ 2019ல் நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4பிரதீபா: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பெருவள்ளூர் கிராமத்தை சேர்ந்த சண்முகம் மகள் பிரதீபா, கடந்த ஆண்டு நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் விஷம் குடித்து தற்கொலை செய்தார்.
5கீர்த்தனா: பெரம்பலூர் தீரன் நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர் செல்வராஜ் மகள் கீர்த்தனா, கடந்த ஆண்டு நீட் தேர்வில் 384 மதிப்பெண் பெற்றதால் மருத்துவ கல்விக்கு சீட் கிடைக்காமல் தற்கொலை செய்தார்.
6வைசியஸ்ரீ: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த சாதாரண மீனவ குடும்பத்தில் பிறந்த வைசியஸ்ரீ டாக்டராகும் ஆசை நீட் தேர்வு தோல்வியால் பாழானதால் கடந்தாண்டு தீக்குளித்து தற்ெகாலை செய்தார்.
7 மோனிஷா: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கூனிமேடு மீனவ கிராமத்தை மோகன் என்பவரின் மகள் மோனிஷா நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் கடந்த ஆண்டு ஜூன் 6ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
8சுபஸ்ரீ: கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த அரசு அதிகாரி ரவிச்சந்திரன் மகள் சுப கடந்தாண்டு நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் இந்த ஆண்டும் தேர்ச்சி அடைய முடியுமா என்ற பயத்தில் கடந்த மாதம் 18ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்தார்.
9விக்னேஷ்: அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே எலந்தங்குழி கிராமத்தை சேர்ந்த விஸ்வநாதன் மகன் விக்னேஷ் 3வது முறையாக நீட் தேர்வு எழுத விண்ணப்பித்த நிலையில் தோல்வி பயத்தில் கிணற்றில் குதித்து கடந்த 8ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.
10ஜோதிஸ்ரீ துர்கா: மதுரையை சேர்ந்த எஸ்.ஐ. முருகுசுந்தரம் மகள் ஜோதி துர்கா, நீட் தேர்வு தோல்வி பயத்தில் நேற்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
11. ஆதித்யா : தர்மபுரி செந்தில்நகரை சேர்ந்த மணிவண்ணன் மகன் ஆதித்யா, நீட் தேர்வு அச்சத்தில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
12மோதிலால்: நாமக்கல் மாவட்டம் திருச்ெசங்கோட்டை சேர்ந்த முருகேசன் மகன் மோதிலால் (21), நீட் தேர்வுக்கு பயந்து நேற்று இரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Tags : Dharmapuri ,Tiruchengode ,Madurai , Three students ,commit suicide , NEET exam , Madurai, Dharmapuri, Tiruchengode
× RELATED பட்டுக்கூடு வரத்து சரிவு