×

கொரோனாவை கட்டுப்படுத்த அதிரடி சீனாவில் இருந்து வந்தால் சுட்டுத் தள்ளி விடுங்கள்: வடகொரிய அதிபர் கிம் உத்தரவு

பியாங்யாங்: ‘சீனாவில் இருந்து யாராவது எல்லை வழியாக ஊடுருவி வந்தால், சுட்டுத் தள்ளி விடுங்கள்,’ என்று ராணுவத்துக்கு வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் உத்தரவிட்டுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பெரும் உயிர்ச்சேதத்தையும், பொருளாதார சேதத்தையும் ஏற்படுத்தி வருகிறது. ஆனால், தனது நாட்டில் இன்னும் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று வடகொரியா கூறி வருகிறது. சில வாரங்களுக்கு முன், எல்லை வழியாக சட்ட விரோதமாக தென்கொரியாவுக்கு சென்று திரும்பிய வடகொரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, அவர் வசித்து வந்த கேசாங் நகரம் முழுவதையும் சீல் வைத்து விட்டார் அதிபர் கிம். அதன் பிறகு, அந்த நபரின் கதி என்னவானது என்று தெரியாது. அதற்கும் முன்பும், தனது நாட்டில் கொரோனா பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட ஒருவருக்கு சிகிச்சை அளிப்பதற்கு பதிலாக, அவரை ஒரேடியாக கிம் சுட்டுக் கொன்று விட்டதாக பரபரப்பு தகவல் வெளியானது.

வடகொரியாவும் சீனாவும் எல்லைகளை பகிர்ந்து கொண்டுள்ளன. சீனாவில் முதன் முதலாக இந்த வைரஸ் பரவியதுமே, தனது நாட்டில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிபர் கிம் எடுத்தார். சீனாவில் இருந்து பரவிய கொரோனா, உலகளவில் 200 நாடுகளை பல மாதங்களாக ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது. ஆனால், இந்த வைரஸ் பரவிய சீனாவில், ‘கொரோனா வைரசா? அப்படி என்றால் என்ன?’ என்று கேட்கும் அளவுக்கு, அதன் பரவல் அங்கு முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. இந்நிலையில், சீனாவில் இருந்து தனது நாட்டு எல்லைக்குள் நுழையும் யாராக இருந்தாலும் சுட்டு கொன்று விடுங்கள் என, தனது நாட்டு ராணுவத்துக்கு வடகொரிய அதிபர் கிம் உத்தரவிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

 தென்கொரியாவில் முகாமிட்டுள்ள அமெரிக்க படையின் தளபதி ராபர்ட் அம்ராம்ஸ் இது பற்றி கூறுகையில், ‘கொரோனா பரவியதை தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதமே சீனா உடனான தனது எல்லையை வடகொரியா மூடி விட்டது. பின்னர், கடந்த ஜூலை மாதம் வரையில் தனது நாட்டில் அவசர நிலையையும் அமல்படுத்தியது. தற்போது, சீனாவில் இருந்து வடகொரியாவுக்குள் நுழைபவர்களை சுட்டு தள்ளும்படி அதிபர் கிம் உத்தரவிட்டுள்ளார்,’ என்று ராபர்ட் கூறியிருக்கிறார். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், வடகொரிய அரசும், ஊடகங்களும் இத்தகவலை உறுதிப்படுத்தவில்லை.

Tags : Kim ,China ,North Korean , North Korean President Kim Jong Un orders to shoot down Corona in Action China
× RELATED போருக்கு தயாராகுங்கள்: ராணுவ தளத்தை பார்வையிட்ட வடகொரியா அதிபர் கிம் ஆணை