×

கொரோனா தொற்று காலத்தில் 1.31 லட்சம் பேருக்கு புற்றுநோய் சிகிச்சை: அமைச்சர் விஜயபாஸ்கர் அறிக்கை

சென்னை: கொரோனா தொற்று காலத்தில் 1.31 லட்சம் பேருக்கு புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா தொற்று பரவல் காலங்களில் அளிக்கப்பட்ட புற்றுநோய் சிகிச்சை குறித்து சுகாதாரத் அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனா தொற்று காலத்திலும் புற்றுநோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சைகள் தடையின்றி வழங்க முதல்வர் அறிவுறுத்தினார். இதன்படி மார்ச் முதல் இதுவரை 1,31,352 பேர் புற்றுநோய் சார்ந்த மருத்துவ சேவைக்காக வெளிப்புற நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளனர். இவர்களில் 48,647 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.

இவர்களில் கருப்பை வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய், தலை மற்றும் கழுத்து புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கான அறுவை சிகிச்சைகள் 2,191 பேருக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 27,721 பேருக்கு கீமோதெரபியும், 11,678 பேருக்கு கதிர்வீச்சு சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது. 6,664 பேருக்கு வலி மற்றும் நிவாரண மையங்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 250 புற்றுநோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 102 வாகன சேவை மூலம் புற்றுநோயாளிகளின் வீடுகளிலிருந்து மருத்துவமனைக்கும், சிகிச்சை முடிந்த பின்பு மீண்டும் வீடுகளிலும் கொண்டு சேர்க்கப்பட்டனர். இந்த சேவையின் மூலம் மார்ச் முதல் இதுவரை 1,396 பேர் பயனடைந்துள்ளனர். கொரோனா தொற்று காலத்திலும் அரசு மருத்துவமனைகள் மக்களுக்கு உரிய சேவைகள் வழங்கி விலைமதிப்பற்ற பல உயிர்களை காப்பாற்றி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Vijayabaskar ,corona epidemic , Corona, 1.31 lakh people treated for cancer during the period
× RELATED அதிமுக மாஜி அமைச்சரின் கல்லூரியில் மாணவன் சாவு