×

கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளுடன் நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு

* தமிழகத்தில் 1.17 லட்சம் பேர் எழுதுகின்றனர்
* 240 மையங்களில் நடக்கிறது

சென்னை: மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு (நீட்) இன்று நாடு முழுவதும் நடக்கிறது. நாடு முழுவதும் இத்தேர்வை 15 லட்சத்து 97 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் 2020-21ம் கல்வி ஆண்டில் மாணவர்களை சேர்ப்பதற்கான தேசிய அளிவிலான நுழைவுத் தேர்வு (நீட்) கடந்த மே மாதம் நடைபெறுவதாக இருந்தது. கொரோனா தொற்று காரணமாக நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து நீட் நுழைவுத் தேர்வை எழுத நாடு முழுவதும் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் விண்ணப்பித்தனர். இவர்கள் தேர்வு எழுதுவதற்காக நாடு முழுவதும் 3,842 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடிசா, அசாமி, வங்கம், உருது ஆகிய 11 மொழிகளில் நடக்கிறது. தமிழகத்தில் நீட் தேர்வுக்காக திருச்சி, சேலம், சென்னை, திருநெல்வேலி, மதுரை, கோவை உள்ளிட்ட 14 நகரங்களில் 240 தேர்வு  மையம் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 990 மாணவர்கள் நீட் தேர்வை இன்று எழுதுகின்றனர். தேர்வு மையங்களில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி மதியம் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடக்கிறது.   

கொரோனா பரவல் காரணமாக தேர்வு மையங்கள் முழுவதும் பாதுகாப்பு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் கிருமி நாசினி கொண்டு காலை ஒருமுறை மற்றும் மாலை ஒருமுறை என இரண்டு முறை சுத்தம் செய்யப்பட்டுள்ளது. தேர்வு எழுத வரும் மாணவ, மாணவியர்களின் உடலை தொடாமல் வெப்ப அளவீட்டு சோதனை செய்யப்படும். சமூக இடைவெளியுடன் 2 மீட்டர் இடைவெளி கொண்ட வட்டத்தில் வரிசையாக நிற்கவைக்கப்பட்டு மெட்டல் டிடெக்டர் கருவியின் மூலம் மாணவர்களை தொடாமல் பரிசோதனை மேற்கொள்ளப்படும். மாணவ, மாணவியர் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பிறகே தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். சமூக இடைவெளியை கடைபிடிக்க 3 அடி இடைவெளி விட்டு தேர்வு மையங்களில் இருக்கைகளில் அமரவைக்கப்படுவார்கள். ஒரு அறையில் 20 பேர் மட்டுமே தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல், தேர்வு எழுத வரும் மாணவ, மாணவியர் காலை 11.40 மணி முதல் மதியம் 1.30 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள். மாணவர்கள் தங்களுக்கு கொரோனா தொற்றோ அல்லது அதற்கான அறிகுறிகளோ இல்லை என்று உறுதி மொழி எழுதித் தர வேண்டும்.   ஹால்டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள நேரத்திற்குள் மாணவர்கள் தேர்வு மையத்துக்கு வந்துவிட வேண்டும். மேலும், தேர்வு மையத்துக்கு வரும் மாணவர்கள் 50 மிலி சானிடைசரை உடன் கொண்டு வர வேண்டும். முகக் கவசம் மற்றும் கையுறைகளை மாணவர்கள் அணிந்து வர வேண்டும். அரசால் வழங்கப்பட்ட பான்கார்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, 12ம் வகுப்பு  தேர்வுக்கு வழங்கப்பட்ட ஹால்டிக்கெட், பாஸ்போர்ட், ஆதார், ரேஷன் கார்டு ஆகியவற்றில் ஏதேனும் ஒரு அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும். அவை அசல் அடையாள அட்டையாக இருக்க வேண்டும். ஏற்கனவே, நீட் தேர்வு கட்டுப்பாடுகளான அரைக்கை சட்டை அணிந்து வர வேண்டும். ஷூ, சாக்ஸ் அணியக்கூடாது. காலணியில் ஹை ஹுல்ஸ் அணியக்ககூடாது. தேர்வு எழுத வரும் மாணவர்கள் அரசால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை, 12ம் வகுப்பு ஹால்டிக்கெட், ஆதார் உள்ளிட்ட ஏதேனும் ஒன்றை கொண்டு வர வேண்டும்.


Tags : country , Need to choose today across the country with corona prevention restrictions
× RELATED ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமே…18,626...