×

தமிழகம் முழுவதும் உள்ள 71 பி.எட். கல்லூரி அங்கீகாரம் ரத்து?: மாணவர்கள் சேர வேண்டாம் என பல்கலைக்கழகம் எச்சரிக்கை

சென்னை: தமிழகம் முழுவதும் 71 கல்வியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, அதில் மாணவர்கள் யாரும் சேர வேண்டாம் என்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ், 7 அரசு கல்லூரிகள் உட்பட 731 கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் பி.எட், எம்.எட் உள்ளிட்ட படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகிறது. இதன்படி இந்த 731 கல்வியியல் கல்லூரிகளும் ஒவ்வொரு ஆண்டும், தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்திடம் (NCTE ) புதிய மாணவர்களை சேர்க்க கட்டாயம் அனுமதி பெற வேண்டும். நடப்பு கல்வியாண்டில் (2020-2021) மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள, அனுமதி நீட்டிப்பு மற்றும் அங்கீகார நீட்டிப்பு கோரி விண்ணப்பித்திருந்த கல்வியியல் கல்லூரிகளின் விண்ணப்பத்தை பரிசீலித்த என்.சி.டி.இ, உரிய கட்டமைப்பு வசதிகள் இல்லாத 58 கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

நோட்டீஸ் அனுப்பியும் உரிய விளக்கம் அளிக்காததால், மாநிலம் முழுவதும் 58 கல்வியியல் கல்லூரிகளின் அங்கீகாரத்தை என்.சி.டி.இ ரத்து செய்துள்ளது. மேலும் 13 கல்வியியல் கல்லூரிகள் தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெறாததால், அந்தக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடத்த முடியாது. எனவே மொத்தம் 71 கல்வியியல் கல்லூரிகள் விதிகளுக்கு புறம்பாக உள்ளதால் அந்தக் கல்லூரிகள் பி.எட் மற்றும் எம்.எட் உள்ளிட்ட கல்வியியல் படிப்புகளில் புதிதாக மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் தடை விதித்துள்ளது. தடை செய்யப்பட்ட 71 கல்வியியல் கல்லூரிகளின் பட்டியலை வெளியிட்டுள்ள ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம், அந்தக் கல்லூரிகளில் மாணவர்கள் யாரும் சேர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. அறிவுறுத்தல்களை மீறி மாணவர்கள் சேர்ந்தால், அதற்கு பல்கலைக்கழகம் பொறுப்பேற்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இது ெதாடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியர் பல்கலைக் கழகத்தின் பதிவாளர் பாலகிருஷ்ணன் அனுப்பியுள்ள சுற்றிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியல் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் கல்வியல் கல்லூரிகள் தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தில் உரிய அங்கீகாரம் இல்லாத மற்றும் என்சிடிஇயால் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ள கல்வியல் கல்லூரிகள், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியல் பல்கலைக் கழகத்தில் இணைவு பெறாத கல்வியல் கல்லூரிகளில் விதிகளின் படி மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி இல்லை. எனவே இந்த கல்லூரிகளில் 2020 - 21ம் கல்வியாண்டில் பி.எட், எம்.எட், பி.ஏ.பி.எட், பி.எஸ்சி.பி.எட் உள்ளிட்ட வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்த செய்யக் கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு விதிகளை மீறி சேர்க்கை செய்யப்படும் மாணவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியல் பல்கலைக் கழகம் எந்தவித பொறுப்பும் ஏற்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : University , 71 B.Ed., college accreditation,University warns students,join
× RELATED ஏழை எளிய மாணவர்களுக்கு சென்னை...