×

ஜோலார்பேட்டை அருகே குழந்தைகளை அச்சுறுத்தும் கழிவுநீர் கால்வாய்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சி அம்பேத்கர் நகர் பகுதியில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு பல வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் போதுமானதாக இல்லாததால் தெருக்கள் முழுவதும் கழிவுநீர் தேங்கியது.  இதனால் அப்பகுதி மக்கள் கோரிக்கை ஏற்று 7 மாதங்களுக்கு முன்பு புதிய கால்வாய் கட்டும் பணி நடந்தது. ஆனால் அந்த கால்வாய் முறையாக கட்டப்படாததால் மேடு, பள்ளமாக உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கியுள்ளது.  வீடுகளுக்குள்ளும் புகுந்து விடுகிறது. மழைக்காலம் தொடங்கியுள்ளதால் கழிவுநீரில் இருந்து நோய் பரப்பும் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இதனால் கொசுக்கடியால் பாதிக்கப்பட்டு பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் கால்வாயில் மழைநீர் தேங்கி, கழிவுநீருடன் கலந்து குளம்போல் தேங்கியுள்ளது. இவ்வழியாக செல்லும் பெரியவர்கள், சிறுகுழந்தைகள் வரை கால்வாயில் தவறிவிழுகின்றனர். இதனால் அவ்வழியாக குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் அஞ்சுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இங்குள்ள கால்வாய் வசதியை சீரமைத்து, கால்வாய் மீது மூடி அமைத்து அசம்பாவிதத்தை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Sewage canal ,children ,Jolarpet , Jolarpet, children, sewer
× RELATED புது வாழ்விற்கு வழியமைத்ததிரு(புது)நாள்