×

தோகைமலை பகுதியில் கிணறு, ஆற்று பாசனத்தில் சம்பா சாகுபடி தீவிரம்

தோகைமலை: கரூர் மாவட்டம் தோகைமலை பகுதியில் கிணற்று பாசனம் மற்றும் ஆற்றுப் பாசனம் மூலம் சம்பா சாகுபடிக்கான பணிகள் நடந்து  வருகிறது.தோகைமலை ஒன்றியத்தில் நெய்தலூர், சேப்ளாப்பட்டி, முதலைப்பட்டி மற்றும் குளித்தலை பகுதி நங்கவரம், நச்சலூர், குறிச்சி, சூரியனூர் போன்ற  பகுதிகளில் ஆற்றுப் பாசனமாகவும், கள்ளை, தளிஞ்சி, தோகைமலை, நாகனூர், கழுகூர், ஆர்ச்சம்பட்டி, ஆர்டிமலை, புழுதேரி, வடசேரி, ஆலத்தூர்,  பாதிரிபட்டி உட்பட 17 ஊராட்சிகள் கிணறு, ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் குளத்துப்பாசன பகுதிகளாகவும் இருந்து வருகிறது. ஆண்டு தோறும் பருவ  மழை முறைப்படி பெய்தால் இப்பகுதியில் விவசாயம் செழித்து காணப்படும்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை குறைந்ததோடு காவிரியில் நீர்வரத்தும் குறைந்தது. இதையடுத்து கரூர் கட்டளை  மேட்டுவாய்க்கால் பகுதியில் இருந்து வரும் காவிரி நீர் பெருமளவில் நிறுத்தப்பட்டது. இதனால் இந்த வாய்க்கால் பகுதியை ஒட்டியுள்ள பகுதியில்  விவசாயம் சரிவர செய்ய முடியாமல் வறண்டு தென்னைமரங்கள் காயும் நிலை ஏற்பட்டது. இதே போல் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் கிணறு  மற்றும் குளத்து பாசனமும் குறைந்தது. தற்போது இந்த ஆண்டு பருவமழை தொடங்கியதோடு காவிரியில் நீர்வரத்தும் வர தொடங்கி உள்ளது. மேலும்  கட்டளை மேட்டு வாய்க்கால் பகுதியில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் தற்போது விவசாயிகள் விதை நெல்  தெளித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு சம்பா சாகுபடியில் பிபிடி ரகமான ஆந்திரா பொன்னி கணுயிடை கருகல் நோய் தாக்கத்தால் மகசூல் கிடைக்காமல் விவசாயிகள்  பாதிக்கப்பட்டனர். இதனால் இந்த ஆண்டு டிகேஎம் 13 மற்றும் பிபிடி 5204 ஆகிய ரக விதை நெல்லை தெளித்து வருகின்றனர். புரட்டாசி மாத  இறுதிக்குள் 15 அல்லது 20 நாள் பயிர்களை நடவு செய்தால் குலைநோய், யானைக்கொம்பன், இலைசுருட்டு போன்ற நோய்கள் தாக்காது என  விவசாயிகள் கூறுகின்றனர். பருவம் தவறி 30 நாள் பயிர்களை (புரட்டாசி மாதத்திற்கு பிறகு) வயல்களில் நடவு செய்தால் நோய்கள் தாக்க வாய்ப்பு  உள்ளதாகவும், மேலும் வளர்ந்த பயிரில் கொப்பரை(அதாவது பூக்கிற தருவாய்) பனி காலங்களில் ஏற்படும். இப்படி ஏற்பட்டால் நோய்தாக்கி மகசூல்  குறையும் என்றும் கூறுகின்றனர்.

இதனால் சூரிய ஒளி அடித்தூரில் படும் வகையில் இடைவெளி விட்டு பயிர்களை நட்டால் புகையான் என்னும் நோயை தவிர்க்கலாம் எனவும்  வேளாண் அதிகாரிகள் கூறுகின்றனர்.120 நாட்களில் மகசூல் அடையும் இந்த வகை நெல் விதைகளை விவசாயிகள் வேளாண்மை துறை அலுவலகங்களில் மானிய விலையில் பெற்று  பயன்பெறலாம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போது தோகைமலை பகுதியில் சம்பா சாகுபடிக்காக நாற்று விடுவது, வயல்களை  தயார்செய்வது போன்ற பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.



Tags : area ,Tokaimalai , Intensity of samba cultivation in well and river irrigation in Tokaimalai area
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...