×

கொரோனாவால் குறைக்கப்பட்ட சம்பளம் பரிதவிக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்கள்: மாற்று வேலைக்கும் செல்ல முடியாத அவலம்

சேலம்: தனியார் பள்ளிகளில் ஆட்குறைப்பு, சம்பள குறைப்பு போன்ற பிரச்னைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக, தனியார் பள்ளி ஆசிரியர்கள்  வேதனை தெரிவித்துள்ளனர்.  கொரோனா தொற்று பரவியதையடுத்து கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு காலகட்டத்தில் பள்ளி, கல்லூரிகளும்  மூடப்பட்டுள்ளது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் தொழிற்சாலைகள், போக்குவரத்து உள்ளிட்டவை மீண்டும் செயல்படத்  துவங்கியுள்ளது. ஆனால் பள்ளிகள், கல்லூரிகள் எப்போது திறக்கும் என்பது இதுவரை உறுதி  செய்யப்படவில்லை. இதில் தனியார் பள்ளி  ஆசிரியர்களை பொறுத்தவரை சம்பள குறைப்பு, ஆள்குறைப்பு போன்ற பிரச்னைகளில் சிக்கி பரிதவித்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர். வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் கோடை முடிந்து ஜூன் மாதத்தில் பள்ளிகள் தொடங்கும்.  ஆனால் கொரோனா பரவல் காரணமாக, நடப்பாண்டு  பள்ளிகள் திறப்பது தொடர்ந்து தாமதமாகி வருகிறது.

மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள்  மாணவர்களுக்கு செல்போன் மூலம் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வகுப்புகள் எடுத்து வருகின்றனர். இதற்காக ஆசிரியர்கள் மட்டுமே பள்ளிக்கு  வருகின்றனர். ஆன்லைன் வகுப்புகள் எடுக்கும் மாணவர்களிடம் பள்ளி நிர்வாகம் கல்விக்கட்டணம், பாடபுத்தக கட்டணம் உள்ளிட்டவைகள் வசூலித்து  வருகிறது. ஆனாலும் கடந்த இரு மாதமாக ஆசிரியர்களுக்கு பாதி சம்பளம் கூட வழங்க முடியாத நிலையில்தான் உள்ளது என்கின்றனர். இது குறித்து தனியார் பள்ளி ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தனியார் பள்ளிகள் உள்ளன. இந்த  பள்ளிகளில் லட்சக்கணக்கான பட்டதாரி ஆசிரியர், ஆசிரியைகள் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை, குறைந்த ஊதியத்திற்கு பணிபுரிந்து  வருகின்றனர்.தனியார் பள்ளிகளை பொறுத்தமட்டில் நிர்வாகம் தான் சம்பளத்தை நிர்ணயம் செய்கிறது.

அவர்களுக்கு தேவை என்றால் சம்பளம் உயர்த்துவார்கள். இல்லை என்றால் பல ஆண்டுகளானாலும் சம்பள உயர்வு இருக்காது. கொரோனா வைரஸ்  தொற்று காரணமாக கடந்த மூன்று மாதமாக பள்ளிகள் இயங்கவில்லை. மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் மூலம்  பாடம் எடுத்து வருகின்றனர். இந்த ஆன்லைன் வகுப்புகள் எடுக்கக்கூட ஆசிரியர்கள்தான் நெட்பேக் செலவு செய்ய வேண்டியுள்ளது. நாள் ஒன்றுக்கு  ஒன்று முதல் 2 ஜிபி நெட்பேக் செலவாகிறது.  இந்த நிலையில் கடந்த ஜூன் மாதத்தில் முழு சம்பளம் வழங்கினர். அதன்பின், கடந்த ஜூலை, ஆகஸ்ட்டில் ஆட்கள் குறைப்பு செய்தள்ளனர்.  மேலும், ஆசிரியர்களுக்கு பாதி சம்பளம்தான் வழங்கப்படுகிறது. சில பள்ளிகளில் அந்த பாதி சம்பளம் கூட வழங்காமல் இருக்கின்றனர். ஏற்கனவே  தனியார் பள்ளி ஆசிரியர்கள் சொற்ப சம்பளத்தில்தான் வேலை செய்து வருகின்றனர். பொதுவாக ஆசிரியர்கள் பணிக்கு படித்தவர்கள் கவுரவத்திற்காக  மட்டுமே  குறைந்த சம்பளம் கிடைத்தாலும் பரவாயில்லை என்று பணி செய்து வருகின்றனர்.

ஆனால் பள்ளி நிர்வாகம் 75 சதவீத மாணவ, மாணவிகளிடம் கல்விக்கட்டணம், பாடப்புத்தகக்கட்டணம், சீருடை கட்டணம் என வசூலித்துவிட்டனர்.  ஆனால் கொரோனாவை காரணம் காட்டி சரிவர கல்விக்கட்டணம் வசூலாகவில்லை என்று கூறுகின்றனர். பாதி சம்பளம் கூட தராமல் இருப்பதால்,  ஆசிரியர்களின் குடும்பம் வறுமையில் தத்தளிக்கிறது. வறுமையை போக்க ஆசிரியர்களுக்கு உரிய சம்பளம் வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.

பார்வை குறைபாடு ஏற்படும் அபாயம்
பள்ளிகள் இயங்காததால் ஆசிரியர், ஆசிரியைகள் மாணவ, மாணவிகளுக்கு ஆன்ட்ராய்டு செல்போன் மூலம் ஆன்லைன் வகுப்புகளை நடத்துகின்றனர்.  அந்த பாடத்தை மாணவர்கள் படித்து பார்த்துவிட்டு, வீட்டு பாடமாக எழுதி ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதற்காக ஆசிரியர்கள் பல  மணிநேரம் செல்போனில் நேரம் செலவிடுகின்றனர். இதனால் ஆசிரியர்களுக்கு பார்வை குறைபாடும்  ஏற்படுகிறது. பலர் தலைவலி ஏற்பட்டு  கண்ணாடி போடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதும் தனியார் பள்ளி ஆசிரியர்களின் குமுறல்.

Tags : Private school teachers ,Corona , Private school teachers whose salaries have been slashed by Corona: The tragedy of not being able to go for alternative work
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...