×

தொடரும் அகழாய்வு பணி ஆதிச்சநல்லூரில் மக்கள் வாழ்விடம் கண்டுபிடிப்பு: வீடுகளில் வடிகால் குழாய் அமைத்தது தென்பட்டது


செய்துங்கநல்லூர்: ஆதிச்சநல்லூரில் நடந்து வரும் அகழாய்வு பணியில் மக்கள் வாழ்விடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் வடிகால் குழாய்  அமைத்தது தென்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், வைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் மே 25 முதல் மாநில தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணி நடந்து வருகிறது.  அகழாய்வு இயக்குனர் பாஸ்கர், தொல்லியல் துறை லோகநாதன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட ஆய்வு மாணவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.  இதற்காக 72 குழிகள் போடப்பட்டுள்ளது.
தற்போது வாழ்விடங்களை கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையில் ஆதிச்சநல்லூரில் தனியாருக்கு சொந்தமான  தோட்டத்தில் தோண்டியபோது அங்கு மக்கள் வாழ்ந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் வீடுகளில் அமைத்திருந்த வடிகால் குழாய் தெரிந்தது.

இவை  கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட வடிகால் குழாய் போல உள்ளது. ஆதிச்சநல்லூரில் இதுபோல வாழ்விடம் பல்வேறு இடங்களில் தென்படலாம் என்பதால்  ஆய்வாளர்கள் உற்சாகமாக பணிகளை தொடர்ந்துள்ளனர். இதற்கிடையில் வருகிற 28ம்தேதிக்குள் அகழாய்வு பணியை முடிவுக்கு கொண்டு வர  வேண்டியுள்ளது. ஆதிச்சநல்லூர் அகழாய்வுக்கு ரூ.28 லட்சம்  ஒதுக்கப்பட்டுள்ளது. இது போதுமானதல்ல, கூடுதலாக பணம் ஒதுக்கீடு செய்து வரும்  நிதியாண்டில் அகழாய்வு தொடர்ந்தால் வரலாற்று சான்றுகள் பலவற்றை கண்டுபிடிக்க ஏதுவாக இருக்கும்.37 இடங்களில் ஆய்வு நடக்குமா?1902ல் அலெக்ஸாண்டர் ரியா ஆய்வு செய்யும் போது, 37 இடங்களில் ஆய்வு செய்ய வேண்டும் என வரைபடம் வரைந்திருந்தார்.

அதில் தாமிரபரணி கரையில் உள்ள ஆதிச்சநல்லூர் பரம்பு, பாலாமடை, மணப்படைவீடு, கீழநத்தம், பாளையங்கோட்டை, கிருஷ்ணாபுரம் பரம்பு, வடக்கு  வல்லநாடு (உழக்குடி), வல்லநாடு, அகரம், முறப்பநாடு, வசவப்பபுரம், அனவரதநல்லூர், விட்டிலாபுரம், கொங்கராயகுறிச்சி, கருங்குளம், ஆதிச்சநல்லூர்,  வைகுண்டம், திருப்புளியங்குடி, புதுக்குடி, வெள்ளுர், கால்வாய், மளவராயநத்தம், ஆழ்வார்திருநகரி, அழகியமணவாளபுரம் (செம்பூர்) திருக்கோளூர்,  அப்பன்கோயில், தென்திருப்பேரை, புறையூர், அங்கமங்கலம், குரும்பூர், நாலுமாவடி, நல்லூர், சுகந்தலை, கொற்கை, மாறமங்கலம், காயல்பட்டினம்,  வீரபாண்டியபட்டினம் ஆகிய இடங்களை குறிப்பிட்டிருந்தார்.
 எனவே ஆய்வாளர்கள் தாமிரபரணி ஆற்றங்கரையில் மேலும் பல ஊர்களில் ஆய்வு செய்ய வேண்டும். அப்போது இதுபோன்று மேலும் பல அபூர்வ  தகவல்களும், இந்த உலகில் மூத்த மொழி தமிழ்மொழி எனவும் நிரூபணமாகும். இதற்கான நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் என்று தமிழக  தொல்லியல் துறையினருக்கு தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முதுமக்கள் தாழி திறப்பு
தமிழக தொல்லியல் துறை ஆணையர் உதயசந்திரன் ஆதிச்சநல்லூரில் நடைபெறும் அகழாய்வு பணி, ஊரின் மையப்பகுதியில் வாழ்விடங்களை  கண்டறியும் பகுதி, ஆதிச்சநல்லூரில் வாழ்விடமாக கருதப்படும் இடத்தில் கிடைத்த  வடிகால் குழாய், தமிழி எழுத்து கண்டுபிடிக்கப்பட்ட இடம்,   பாண்டியராஜா கோயில் பரம்பு பகுதி, குழந்தையின் எலும்புகூடு கிடைத்த பனங்காட்டு பகுதி என அனைத்து அகழாய்வு குழிகளையும் அவர்  பார்வையிட்டார். ஆதிச்சநல்லூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சங்கர்கணேஷ் அவரை  வரவேற்றார்.

அகழாய்வு இயக்குனர் பாஸ்கர், தொல்லியல்  துறை லோகநாதன் ஆகியோர் அவருக்கு அங்கு எடுக்கப்பட்ட பொருள் உள்பட பல்வேறு அகழாய்வு பணியை  எடுத்து கூறினார்.  பின் புளியங்குளம்  முதுமக்கள் தாழி மையத்தில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை காட்சிக்கு வைத்திருந்தனர். அதையும் அவர் பார்வையிட்டார். பின்அகழாய்வு   நடைபெறும் இடத்தில் திறக்காமல் வைக்கப்பட்டிருந்த முதுமக்கள் தாழியை திறந்து, இயக்குனர் முன்னிலையில்  உள்ளே உள்ள எலும்பு கூடு  பத்திரமாக எடுக்கப்பட்டு,  சோதனைக்கு அனுப்பப்பட்டது.

Tags : Adichanallur ,houses , Continuing excavation work Discovery of human habitat in Adichanallur: Drainage pipes were found in houses
× RELATED சிவகளையில் தொல்லியல் துறை முதல்கட்ட அகழாய்வு பணி நிறைவு: 70 குழிகள் மூடல்