×

ஊட்டி தாவரவியல் பூங்காவில் 2வது சீசனுக்காக 7 ஆயிரம் தொட்டியில் மலர் அலங்காரம்

ஊட்டி:  ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 2வது சீசனுக்காக 7 ஆயிரம் தொட்டிகளில் நடவு செய்யப்பட்ட பல்ேவறு வண்ண மலர் செடிகள்  அலங்காரப்படுத்தும் பணிகள் துவங்கியது.கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, முதுமலை,  தொட்டபெட்டா, படகு இல்லம் உள்ளிட்ட அனைத்து சுற்றுலாத்தலங்களும் மூடப்பட்டன. மே மாதம் நடைபெற இருந்த கோடை விழாக்களும் ரத்து  செய்யப்பட்டது. கடந்த 5 மாதத்திற்கு மேலாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. பூங்காக்கள் மட்டும்  திறக்க அரசு அனுமதி வழங்கிய நிலையில், நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுபாட்டில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா  போன்ற பூங்காக்கள் மட்டும் 176 நாட்களுக்கு பிறகு கடந்த 9ம் தேதி முதல் திறக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறையில் உள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால் சுற்றுலா பாதிப்படைந்துள்ளதாக  பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வந்தது. இதனை தொடர்ந்து இ-பாஸ் முறையில் டூரிசம் என்ற பிரிவு ஏற்படுத்தப்பட்டது. இதனை  பயன்படுத்தி சுற்றுலா பயணிகள் வர அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. பூங்காக்கள் மட்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், குறைந்த அளவிலான  சுற்றுலா பயணிகள் பூங்காவை பார்த்து வருகின்றனர்.

இதனிடையே செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கடைபிடிக்கப்படும் 2வது சீசனையொட்டி தாவரவியல் பூங்காவில் அலங்கார மாடங்களில் மலர்  தொட்டிகள் அடுக்கி வைக்கும் பணிகள் நேற்று நடந்தது. இதனை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்ரியா சாஹூ, மாவட்ட கலெக்டர் இன்னசென்ட்  திவ்யா ஆகியோர் துவக்கி வைத்தனர்.
2வது சீசனுக்காக தாவரவியல் பூங்காவில் 2 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு தற்போது பூத்து குலுங்குகின்றன. இதுதவிர டேலியா,  சால்வியா, இன்காமேரி கோல்டு, பிரெஞ்ச் மேரிகோல்டு, பிகோனியா, டெய்சி, காலண்டுலா, ஆஸ்டர் உள்ளிட்ட பல்வேறு வகை மலர் செடிகள்  தொட்டிகள் நடவு செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி  பூங்காவை பார்த்து ரசிக்கலாம் என தோட்டக்கலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியின்போது, தோட்டக்கலை இணை இயக்குநர்  சிவசுப்பிரமணியம் சாம்ராஜ், துணை இயக்குநர்கள் உமாராணி, சிப்லா மேரி, குருமணி, உதவி இயக்குநர்கள் ராதாகிருஷ்ணன், பாலசங்கர், சுரேஷ்,  ஜெயந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : season ,Ooty Botanical Garden , At the Ooty Botanical Garden 7 thousand pot flower arrangement for the 2nd season
× RELATED பராமரிப்பு பணிகளுக்காக ஊட்டி தாவரவியல் பூங்கா புல் மைதானம் மூடல்