×

குணமடைந்தவர்களாக கணக்கு காட்டப்பட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்ட 9,500 பேர் லிஸ்டிலிருந்து நீக்கம்

* தொற்று பரவும் அபாயம் * நிபுணர்கள் எச்சரிக்கை

சென்னை: கொரோனா தொற்று உள்ளவர்களில் 9500 பேர் குணமானவர்கள் என்று அறிவிக்கப்பட்டு, வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ள தகவல்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. செப்டம்பர் 1ம் தேதி பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையான 4 லட்சத்து 33,969,  செப்டம்பர் 10ம் தேதி 4 லட்சத்து 86,052 ஆக உயர்ந்துள்ளது. இந்த அடிப்படையில் பார்க்கும்போது கடந்த 10 நாட்களில் சராசரியாக 5600 பேருக்கு  கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.செப்டம்பர் 1ம் தேதி புதிதாக தொற்று ஏற்பட்ட 5,928 பேரையும் சேர்த்து மொத்தம் 58,011 ேபர் கொரோனா பாதிப்பில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த  எண்ணிக்கை செப்டம்பர் 10ம் தேதி 48,482 ஆக குறைந்தது. அதாவது 9,529 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இவர்கள் அனைவரும் உலக சுகாதார அமைப்பு மற்றும் நோய் தடுப்பு கட்டுப்பாடு மையத்தின் விதிகளின்படி அடுத்த ஒரு வாரத்திற்கு  வீடுகளில் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். அதற்கு அவர்களின் பட்டியல் சுகாதாரத்துறையிடம் தொடர்ந்து இருக்க வேண்டும். ஆனால்,  இந்த 9,529 பெயர்களும் குணமானவர்கள் என்று அறிவிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களை கண்காணிக்க எந்த நடவடிக்கையும் இல்லை.அறிகுறி இல்லாமல் வரும் கொரோனா நோயாளிகளுக்கு பிசிஆர் சோதனையில் தொடர்ந்து நெகடிவ் என்று வந்தால் அவர்களை 10 நாட்களுக்கு  முன்பே வீட்டுக்கு அனுப்பிவிடலாம். ஆனால், அவர்கள் 7 நாட்கள் தங்கள் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.அதன்பிறகு பரிசோதனையில் நெகடிவ் என்று வந்தால் மட்டுமே அவர்களை கொரோனா பாதிப்பு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று மாவட்ட  மருத்துவ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார இயக்குனர் டி.எஸ்.செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த வழிகாட்டுதல்களுக்கு முரணாக சோதனையில் நெகடிவ் என்று வந்தவுடன் வீட்டுக்கு அனுப்பும் நடைமுறைதான் உள்ளது. இதனால்,  கொரோனா பாதிப்பு பட்டியிலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்டவர்கள் தங்களை தனிமைப்படுத்துவதில்லை. இது பெரிய அளவில் கொரோனா  தொற்றை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. உயிரிழப்புகளும் அதிகரிக்கும்.கடந்த 10 நாட்களில் மட்டும் கொரோனா பாதிப்பில் உயிரிழந்தவர்கள் 736 பேர். தமிழகத்தில் இதுவரை 4 லட்சத்து 86,052 பேர் கொரோனா பாதிப்புக்கு  உள்ளாகியுள்ளனர். இவர்களில் 4 லட்சத்து 29,416 பேர் குணமாகியுள்ளனர். இதன் மூலம் குணமானவர்களின் சதவீதம் 88 ஆகும். பலியானவர்கள் 8,154  பேர். பலி சதவீதம் 1.7 ஆக உள்ளது.

இந்த சூழ்நிலையில் உயிரிழப்புகளையும், கொரோனா பாதிப்பையும் குறைத்து காட்டுவதற்காக பாதிக்கப்பட்டோர் பட்டியலில் இருந்து கடந்த 10  நாட்களில் 9,529 பேரின் பெயர் நீக்கப்பட்டது. இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று நோய் தொற்று தடுப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.  குணமானவர்கள் பட்டியலும் சந்தேகத்தை எழுப்பியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.Tags : Accounted for as healed Affected by corona 9,500 removed from the list
× RELATED கொரோனாவுக்கு உலக அளவில் 1,178,527 பேர் பலி