×

9 மாதங்களுக்கு பிறகு ஏற்றம் பயணிகள் வாகன விற்பனை 14% உயர்வு: வாகன உற்பத்தியாளர்கள் தகவல்

புதுடெல்லி: பயணிகள் வாகன விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 14 சதவீதம் உயர்ந்துள்ளதாக, வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் (சியாம்) தெரிவித்துள்ளது. ஏற்கெனவே பொருளாதார மந்த நிலையால் பாதிக்கப்பட்டிருந்த ஆட்டோமொபைல் துறை, கொரோனா பரவல் காரணமாக மிக மோசமான பின்னடைவுக்கு தள்ளப்பட்டது. டிராக்டர் தவிர, மற்ற அனைத்து பிரிவுகளிலும் வாகன விற்பனை சரிவை சந்தித்தது. இந்நிலையில், இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் (சியாம்) நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 2,15,916 பயணிகள் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. முந்தைய ஆண்டு ஆகஸ்டில் விற்பனையான 1,89,129 வாகனங்களை விட 14.16 சதவீதம் அதிகம். தொடர்ந்து 9 மாத சரிவுக்கு பிறகு முதல் முறையாக விற்பனை உயர்ந்துள்ளது. இதுபோல், பண்டிகை சீசன் நெருங்குவதால் கார் டூவீலர் விற்பனையும் சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த மாதத்தில் 1,24,715 கார்கள் விற்பனையாகியுள்ளன. இது முந்தைய ஆண்டு ஆகஸ்டில் விற்ற 1,09,277 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 14.13 சதவீதம் அதிகம்.

 இதுபோல், பல்நோக்கு பயன்பாட்டு வாகனங்கள் விற்பனை 15.54 சதவீதம் உயர்ந்து 81,842 ஆகவும், வேன்கள் விற்பனை 3.82 சதவீதம் உயர்ந்து 9,359 ஆகவும், டூவீலர் விற்பனை 3 சதவீதம் உயர்ந்து 15,59,665 ஆகவும் அதிகரித்துள்ளது. பைக் விற்பனை 10.13 சதவீதம் உயர்ந்து 10,32,476 பைக்குகள் விற்பனையாகியுள்ளன. அதேநேரத்தில் ஸ்கூட்டர் விற்பனை 12.3 சதவீதம் குறைந்து 4,56,848 ஸ்கூட்டர்கள் விற்பனையாகின. முந்தைய ஆண்டு ஆகஸ்டில் இந்த எண்ணிக்கை 5,20,898 ஆக இருந்தது. மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை 75.29 சதவீதம் குறைந்து 14,534 வாகனங்களாக குறைந்துள்ளது. கடந்த மாதத்தில் டூவீலர் மற்றும் பயணிகள் வாகன விற்பனையை பார்க்கும்போது, வாகன துறை சற்று மீள்வதற்கான வாய்ப்புகள் உள்ளது என்ற நம்பிக்கை அளிக்கிறது. அதேநேரத்தில், இந்த புள்ளி விவரங்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்த விற்பனை நிலவரத்துடன்தான் ஒப்பிட்டு பார்க்கப்பட்டுள்ளன.

ஆனால், கடந்த ஆண்டு ஆகஸ்டில் வாகன விற்பனை 2018ம் ஆண்டை விட பயணிகள் வாகன விற்பனை 32 சதவீதம், டூவீலர் விற்பனை 22 சதவீதம் சரிந்திருந்தது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என சியாம் தலைவர் கெனிச்சி அயுகவா தெரிவித்தார்.  சியாம் புள்ளி விவரங்களின்படி, மாருதி சுசூகி விற்பனை 21.32 சதவீதம், ஹூண்டாய் மோட்டார்ஸ் 19.9 சதவீதம், மகிந்திரா அண்ட் மகிந்திரா 1.09 சதவீதம், ஹீரோ மோட்டார் கார்ப்பொரேஷன் 8.52 சதவீதம், பஜாஜ் ஆட்டோ 3 சதவீதம் விற்பனை உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளன.



Tags : Automakers , Boom after 9 months Passenger vehicle sales up 14%: Vehicle manufacturers report
× RELATED நாமக்கல் பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை ரூ.4..40 ஆக நிர்ணயம்