×

யுஎஸ் ஓபன் டென்னிஸ் பைனலில் ஒசாகா, அசரென்கா: வெளியேறினார் செரீனா

நியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொட ரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் விளையாட ஜப்பானின் நவோமி ஒசாகா, பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா தகுதி பெற்றனர். அமெரிக்க நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ் அரை இறுதியில் தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார்.கொரோனா அச்சுறுத்தலுக்கிடையே நடைபெற்று வரும் யுஎஸ் ஓபன் தொடர் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில், 6 முறை சாம்பியனான செரீனா வில்லியம்சுடன் (39 வயது) மோதிய அசரென்கா (31 வயது) 1-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். இதனால் செரீனா மிக எளிதாக வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

எனினும், அடுத்த 2 செட்களிலும் அபாரமாக விளையாடி புள்ளிகளைக் குவித்த அசரென்கா 1-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் 1 மணி, 56 நிமிடம் போராடி வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். 2012 மற்றும் 2013ல் இறுதிப் போட்டி வரை முன்னேறி செரீனாவிடம் தோல்வியைத் தழுவிய அசரென்கா, நேருக்கு நேர் மோதிய 23 போட்டிகளில் 5வது வெற்றியைப் பதிவு செய்து அசத்தினார். செரீனாவுடன் கடைசியாக மோதிய 10 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வி, கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் செரீனாவை வீழ்த்தியதே இல்லை போன்ற மோசமான வரலாற்றை மாற்றி எழுதியுள்ளார் அசரென்கா.அதே சமயம், 24வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று சாதனை படைக்க வேண்டும் என்ற செரீனாவின் கனவு கலைந்தது. இடது காலில் ஏற்பட்ட காயமும் அவரது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

மற்றொரு அரை இறுதியில் அமெரிக்காவின் ஜெனிபர் பிராடியுடன் மோதிய ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா, டை பிரேக்கர் வரை நீடித்து கடும் போராட்டமாக அமைந்த முதல் செட்டை 7-6 (7-1) என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலை பெற்றார். அடுத்த செட்டில் ஒசாகாவின் சர்வீஸ் ஆட்டங்களை அதிரடியாக முறியடித்து புள்ளிகளைக் குவித்த ஜெனிபர் 6-3 என வென்று பதிலடி கொடுக்க, சமநிலை ஏற்பட்டது.மூன்றாவது மற்றும் கடைசி செட் ஆட்டத்தில் பதற்றமின்றி விளையாடிய ஒசாகா 7-6 (7-1), 3-6, 6-3 என்ற கணக்கில் வென்று பைனலுக்கு முன்னேறினார்.

விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 8 நிமிடத்துக்கு நீடித்தது. சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் விக்டோரியா அசரென்கா - நவோமி ஒசாகா மோத உள்ளனர். புரூனோ - பாவிச் சாம்பியன்: ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் நெதர்லாந்தின் வெஸ்லி கூல்ஹாப் - நிகோலா மெக்டிச் (குரோஷியா) ஜோடியுடன் மோதிய புரூனோ சோரெஸ் (பிரேசில்) - மேட் பாவிச் (குரோஷியா) ஜோடி 7-5, 6-3 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை முத்தமிட்டது.

Tags : Osaka ,tennis final ,Serena ,US Open , US Open Tennis Osaka, Azarenka: Out in the final Serena
× RELATED கொழுப்பு சத்து குறைக்க மருந்து சாப்பிட்ட 5 பேர் பலி