×

எம்எல்ஏக்களுக்கு கொரோனா பரிசோதனை: சட்டசபை நாளை மறுநாள் கூடுவதால் வீடுகளுக்கே சென்று நடத்தப்பட்டது

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் நாளை மறுதினம் தொடங்குகிறது. இதையொட்டி முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட அனைத்து எம்எல்ஏக்களுக்கும் நேற்று நேரடியாக வீடுகளுக்கே சென்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதேபோன்று, கூட்டத்தில் பங்கேற்கும் ஊழியர்கள், காவலர்கள், பத்திரிகையாளர்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டன.தமிழக சட்டப்பேரவை கூட்டம் நாளை மறுதினம் (திங்கள்) காலை 10 மணிக்கு ஓமந்தூரார் அரசினர் தோட்டம் கலைவாணர் அரங்கம் மூன்றாவது தளம் கூட்ட அரங்கத்தில் நடக்கிறது. இந்த கூட்டத்தொடர் 14, 15, 16 ஆகிய 3 நாட்கள் மட்டுமே நடைபெறும் என்று கடந்த 8ம் தேதி சபாநாயகர் தனபால் தலைமையில் நடந்த அலுவல் ஆய்வு குழுவில் முடிவு செய்யப்பட்டது.முதல் நாள் கூட்டம் தொடங்கியதும், மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மறைந்த எம்எல்ஏ ஜெ.அன்பழகன், வசந்தகுமார் எம்பி மற்றும் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் காரணமாக உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து கூட்டம் ஒத்திவைக்கப்படும். 15ம் தேதி (செவ்வாய்) அரசினர் அலுவல்கள் எடுத்துக் கொள்ளப்படும். 16ம் தேதி (புதன்) முதல் துணை நிதிநிலை அறிக்கை (துணை பட்ஜெட்) தாக்கல் செய்யப்பட்டு விவாதம் இன்றி நிறைவேற்றப்படும். தொடர்ந்து சட்டமுன்வடிவுகள் ஆய்வு செய்து நிறைவேற்றப்படுகிறது. அத்துடன் 3 நாள் கூட்டத் தொடர் முடிவுக்கு வரும்.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கூட்டத்தொடரில் பங்கேற்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்தால் மட்டுமே கூட்டத்தொடரில் பங்கேற்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் 72 மணி நேரத்துக்கு முன்னதாக கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்யப்பட வேண்டும் என்று சபாநாயகர் தனபால் கூறி இருந்தார்.
அதன்படி, நேற்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கே சுகாதாரத் துறை அதிகாரிகள் சென்று கொரோனா பரிசோதனை செய்தனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெரியகுளத்தில் உள்ள அவரது வீட்டில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவ மனையில் பரிசோதனை செய்து கொண்டார். அமைச்சர்கள் மற்றும் அனைத்து எம்எல்ஏக்களின் வீடுகளுக்கும் சுகாதாரத் துறை அதிகாரிகள் நேற்று சென்று பரிசோதனை செய்தனர். ஒரு சில எம்எல்ஏக்கள் நேற்று கொரோனா பரிசோதனை செய்யவில்லை. விடுபட்டவர்களுக்கு இன்று பரிசோதனை செய்யப்படுகிறது.

அதேபோன்று கூட்டத்தொடரில் பங்கேற்கும் காவலர்களுக்கு தனியாக பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. தலைமை செயலக ஊழியர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு நேற்று காலை முதல் மாலை வரை சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா பரிசோதனைசெய்யப்பட்டது. சோதனை முடிவு இன்று காலை அறிவிக்கப்படுகிறது. இதில் கொரோனா இல்லையென்றால் மட்டுமே அடையாள அட்டை வழங்கப்பட்டு, அவர்கள் மட்டுமே சட்டப்பேரவை கூட்டத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு வீடுகளுக்கே சென்று கொரோனா பரிசோதனை செய்தாலும் அவர்கள் பரிசோதனை முடிவு எப்படி இருக்கும் என்று கலக்கத்தில் உள்ளதாகவே கூறப்படுகிறது. காரணம், கடந்த 9ம் தேதி முதல்வர் எடப்பாடி திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா ஆய்வு பணிக்காக சென்றார்.

வழக்கமாக முதல்வர் விழா நடைபெறும்போது, அந்த கூட்டத்தில் பங்கேற்கும் அனைத்து விவிஐபி, விஐபிக்கள், அரசு அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும். அப்படி பரிசோதனை செய்யும்போதுதான் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவசர அவசரமாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டு ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்
அதேபோன்று பெரம்பலூர் மாவட்ட அதிமுக செயலாளரும் குன்னம் தொகுதி எம்எல்ஏவுமான ராமச்சந்திரனுக்கு நேற்று முன்தினம் கொரோனா பாசிட்டிவ் காரணமாக கேரளாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதல்வர், நேற்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறும் விழாவில் கலந்துகொண்டார்.

இதனால், அங்கு உள்ள விஐபிக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் மாவட்ட செயலாளர் சோமசுந்தரத்துக்கு பரிசோதனை உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். நேற்று முதல் எம்எல்ஏக்களின் வீடுகளுக்கே சென்று கொரோனா பரிசோதனை செய்துள்ளதால், அவர்களில் சிலருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்படலாம் என்று அச்சம் நிலவுகிறது. அதேபோன்று அரசு அதிகாரிகள், போலீசாரும் திடீர் கொரோனா பரிசோதனையால் அச்சத்துடனே உள்ளனர். இதன் காரணமாக இன்று அல்லது நாளை வரும் கொரோனா பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்களால் கூட்டத்தொடரில் கலந்துகொள்ள முடியாது. இந்த பிரச்னை வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் முக்கிய விவாத பொருளாக மாறவும் வாய்ப்புள்ளது.

*  சென்னையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தேனியில் உள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு வீடுகளுக்கே சென்று கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது.
* ஒரு சில எம்எல்ஏக்கள் நேற்று கொரோனா பரிசோதனை செய்யவில்லை. விடுபட்டவர்களுக்கு இன்று பரிசோதனை செய்யப்படுகிறது.
* அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு வீடுகளுக்கே சென்று கொரோனா பரிசோதனை செய்தாலும் முடிவு எப்படி இருக்குமோ என்று அவர்கள் கலக்கத்தில் உள்ளதாக தெரிகிறது.
* கொரோனா பரிசோதனை முடிவில் தொற்று உறுதி செய்யப்பட்டால் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் என யாரும் கூட்டத்தொடரில் கலந்துகொள்ள முடியாது.

Tags : Corona ,assembly , Corona test for MLAs: As the assembly convened the next day, it was conducted door-to-door
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...