×

சென்னை கலைவாணர் அரங்கில் 14ம் தேதி பேரவை கூட்டம்: எம்எல்ஏக்களுக்கு கொரோனா டெஸ்ட்: ‘நெகட்டிவ்’ வந்தால் தான் கூட்டத்தில் பங்கேற்க முடியும்

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் வருகிற திங்கட்கிழமை தொடங்குகிறது. இதையொட்டி அனைத்து எம்எல்ஏக்களுக்கும் நேரடியாக வீடுகளுக்கே சென்று கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோன்று, கூட்டத்தில் பங்கேற்கும் ஊழியர்கள், பத்திரிகையாளர்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டன. தமிழக சட்டப்பேரவை கூட்டம் வருகிற 14ம் தேதி (திங்கள்) காலை 10 மணிக்கு சென்னை, வாலாஜா சாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டம் கலைவாணர் அரங்கம் மூன்றாவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடர் 14, 15, 16 ஆகிய 3 நாட்கள் மட்டுமே நடைபெறும் என்று கடந்த 8ம் தேதி நடைபெற்ற அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

முதல் நாள் (14ம் தேதி) கூட்டம் தொடங்கியதும், மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மறைந்த எம்எல்ஏ ஜெ.அன்பழகன், வசந்தகுமார் எம்பி மற்றும் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் காரணமாக உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து கூட்டம் ஒத்திவைக்கப்படும். 15ம் தேதி (செவ்வாய்) அரசினர் அலுவல்கள் எடுத்துக் கொள்ளப்படும். 16ம் தேதி (புதன்) முதல் துணை நிதிநிலை அறிக்கை (துணை பட்ஜெட்) தாக்கல் செய்யப்பட்டு விவாதம் இன்றி நிறைவேற்றப்படும். தொடர்ந்து சட்டமுன்வடிவுகள் ஆய்வு செய்து நிறைவேற்றப்படுகிறது. அத்துடன் 3 நாள் கூட்டத் தொடர் முடிவுக்கு வரும்.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் கண்டிப்பாக பரிசோதனை செய்ய வேண்டும். கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்தால் மட்டுமே கூட்டத்தொடரில் பங்கேற்க முடியும் என்று சபாநாயகர் தனபால் அறிவித்திருந்தார். அதேநேரம், பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்பவர்களுக்கு அரசு சார்பில் கொரோனா பரிசோதனைக்கு ஏற்பாடுகள் செய்யப்படும். கூட்டம் நடைபெறும் 72 மணி நேரத்துக்கு முன்னதாக கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்யப்பட வேண்டும் என்று சபாநாயகர் தனபால் கூறினார்.
அதன்படி, இன்று முதல் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அனைத்து எம்எல்ஏக்களுக்கு சுகாதார துறை அதிகாரிகள் மூலம் அவர்களின் வீடுகளுக்கே சென்று பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று கூட்டத்தொடரில் பங்கேற்கும் காவலர்களுக்கு தனியாக பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்களுக்கு இன்று காலை முதல் சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இன்று நடைபெறும் சோதனை முடிவு நாளை அல்லது நாளை மறுதினம் அவர்களுக்கு தெரிவிக்கப்படும். இதில் கொரோனா இல்லையென்றால் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க முடியும்.
அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு வீடுகளுக்கே சென்று கொரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டாலும் அவர்கள் கலக்கத்தில் உள்ளதாகவே கூறப்படுகிறது. காரணம், கடந்த 9ம் தேதி முதல்வர் எடப்பாடி திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா ஆய்வு பணிக்காக சென்றார்.

வழக்கமாக முதல்வர் விழா நடைபெறும்போது, அந்த கூட்டத்தொடரில் பங்கேற்கும் அனைத்து விவிஐபி, விஐபிக்கள், அரசு அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும். அப்படி பரிசோதனை செய்யும்போதுதான் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவசர அவசரமாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்
அதேபோன்று பெரம்பலூர் மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளரும் குன்னம் தொகுதி எம்எல்ஏவுமான ராமச்சந்திரனுக்கு நேற்று கொரோனா பாசிட்டிவ் காரணமாக கேரளாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதல்வர், இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்கிறார். இதனால், அங்கு உள்ள விஐபிக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் மாவட்டச் செயலாளர் சோமசுந்தரத்துக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது. இதேபோன்று, இன்று முதல் எம்எல்ஏக்களுக்கு வீடுகளுக்கே சென்று கொரோனா பரிசோதனை செய்வதால் இன்னும் பலர் கொரோனா உறுதிப்படுத்தப்படலாம் என்று அச்சம் நிலவுகிறது. அதேபோன்று அரசு அதிகாரிகள், போலீசாரும் திடீர் கொரோனா பரிசோதனையால் அச்சத்துடனே உள்ளனர். இதன்காரணமாக நாளை அல்லது நாளை மறுதினம் வரும் கொரோனா பரிசோதனை முடிவில் பல எம்எல்ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்படலாம் என்பதால், வருகிற கூட்டத்தொடரில் பலர் கலந்து கொள்ள முடியாத வாய்ப்பும் உள்ளதாக கூறப்படுகிறது. இதுவே வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் முக்கிய விவாத பொருளாக மாறவும் வாய்ப்புள்ளது.



Tags : Corona Test ,Chennai Kalaivanar Arena ,meeting , Assembly meeting on 14th at Chennai Kalaivanar Arena: Corona Test for MLAs: Only 'Negative' can participate in the meeting
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...