×

சுவாதி கொலை விவகாரம்!: சிறையில் ராம்குமார் தற்கொலை செய்துகொண்ட வழக்கு தொடர்பாக புழல் சிறை அதிகாரி நேரில் ஆஜராக உத்தரவு..!!

சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருந்த ராம்குமார் மின் ஒயரை கடித்து தற்கொலை செய்துக் கொண்டது தொடர்பாக புழல் சிறை அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னையை சேர்ந்த பொறியாளர் சுவாதி கடந்த 2016ம் ஆண்டு ஜூன் மாதம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டார். அவரை ஒருதலைப்பட்சமாக காதலித்த நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த பரமசிவம் மகன் ராம்குமார் என்பவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அப்போது 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ராம்குமார் மின் ஒயரை கடித்து தற்கொலை செய்துக் கொண்டார். ராம்குமார் மரணம் தொடர்பாக பத்திரிகையில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு  மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கில் புழல் சிறை அதிகாரிகளுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சிறை கண்காணிப்பாளர் செந்தாமரை கண்ணன், துணை ஜெயிலர் உதயகுமார், உதவி ஜெயிலர் பிச்சாண்டி, தலைமை வார்டன் சங்கர் ராஜ், முதல் நிலை வார்டன்கள் ராம்ராஜ், பேச்சுமுத்து ஆகிய 6 பேரும் வருகின்ற 30ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, புழல் சிறையில் இருந்த ராம்குமார் மின் ஒயரை கடித்து தற்கொலை செய்துக் கொண்டது தொடர்பாக அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags : Swathi ,jail officer ,Puhal ,jail ,suicide ,Ramkumar , Swathi murder case !: Puhal prison officer ordered to appear in person in connection with the case of Ramkumar's suicide in jail .. !!
× RELATED வல்லவன் வகுத்ததடா படத்தில் 5 பேரின் ஹைப்பர்-லிங்க் கதை