×

புதுடெல்லியில் இ-வாகனங்களுக்கு மானியம் அடுத்த வாரம் வெளியீடு

புதுடெல்லி : மாநில அரசின் இ-வாகன கொள்கை திட்டத்தில், பயனாளிகளுக்கு மானியம் வழங்கும் அறிவிப்பை அடுத்த வாரம் வெளியிட தீவிரமாக ஆலோசித்து வருவதாக அதிகாரிகல் தெரிவித்து உள்ளனர். மின்சார வாகன கொள்கையை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் 7ம் தேதி வெளியிட்டார். பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் வெளியிடும் புகையால், காற்று மாசு பிரச்னை ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், மின்சார பேட்டரியில் இயங்கும் வாகனங்களை டெல்லியில் அதிகரிப்பு செய்வது கொள்கையின் முக்கிய நோக்கம் என கெஜ்ரிவால் அப்போது கூறினார்.

மேலும் பெட்ரோல், டீசலுக்கான கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய மத்திய அரசு அதிகளவில் செலவு செய்கிறது. இதனால் பொருளாதார ரீதியில் நாட்டில் பிரச்னைகள் ஏற்படுகிறது பெட்ரோலிய எரிபொருளுக்கு சிறந்த மாற்று எரிபொருள் புகையே இல்லாத மின்சார பேட்டரி தான் என கெஜ்ரிவால் விளக்கமும் அளித்தார். நாட்டின் முற்போக்கான இந்த கொள்கையை மாநிலத்தில் அறிமுகம் செய்வதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளீல் 5 லட்சம் புதிய இ-வாகனங்கள் தலைநகரில் பதிவாகும் என நம்புவதாகவும் அவர் கூறியிருந்தார். இதற்கான இ-வாகன் வாரியமும் தொடங்கப்படும் எனவும் போக்குவரத்து அமைச்சர் கைலாஷ் கெலாட்டும் பத்திரிகையாளர்களிடம் அப்போது கூறினார்.

இந்நிலையில், இ-வாகன திட்டத்தில் பயனாளிகளுக்கு மானியம் வழங்கும் கணக்கீடு குறித்த மென்பொருள் (சாப்ட்வேர்) எப்படி உருவாக்குவது என தனியார் ஐசிஐசிஐ வங்கியின் தலைமை அதிகாரிகளுடன் அமைச்சர் கெலாட் உள்ளிட்ட போக்குவரத்து மற்றும் நிதித்துறை அதிகாரிகள் குழு நேற்று முன்தினம் தீவிரமாக ஆலோசனை நடத்தினர். அப்போது தங்கள் வசம் உள்ள ஒரு மென்பொருளை கம்ப்யூட்டரில் வங்கி அதிகாரிகள் இயக்கிக் காண்பித்தனர். அதில் திருப்தி அடைந்த இரு தரப்புக்கும் திருப்தி ஏற்பட்டது.

அதையடுத்து, மானியம் குறித்த அறிவிப்பை அடுத்த வாரம் வெளியிடுவது என ஆம் ஆத்மி அரசு தீர்மானித்து உள்ளதாக அரசு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இ-வாகன கொள்கையின்படி, இரு சக்கர வாகனம், ஆட்டோ, இ-ரிக்‌ஷா மற்றும் இலகு ரக சரக்கு வாகனங்களுக்கு ரூ.30,000 வரையிலும், கார்களுக்கு ரூ.1.5 லட்சம் வரையிலும் மானியம் அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. அதுபோல மென்பொருளை அனைத்து டீலர்களும் தங்களது கம்ப்யூட்டரில் பதிவேற்றி அதில்  உள்ள படிவத்தில் பயனாளியின் வங்கி கணக்கு உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பதிவேற்றினால், வங்கியில் இருந்து இ-வாகனம் கொள்முதல் செய்த 2 நாட்களில் பயனாளியின் வங்கிக் கணக்கில் மானியம் செலுத்தப்படும் எனவும் அதிகாரி உற்சாகப்படுத்தி உள்ளார். முன்னதாக இ-வாகன விற்பனை டீலர்கள், மாநில போக்குவரத்து துறையில் தங்களது நிறுவனத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது. அதுபோல இ-வாகனங்களுக்கு உரிமம் பதிவு , சாலை வரிகளும் விலக்கு அளிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

* டெல்லியில் அடுத்த 5 ஆண்டுகளில் 5 லட்சம் புதிய இ-வாகனங்கள் தலைநகரில் பதிவாகும். இதற்கான இ-வாகன் வாரியமும் தொடங்கப்படும்.

* இ-வாகன  கொள்கையின்படி, இரு சக்கர வாகனம், ஆட்டோ, இ-ரிக்‌ஷா மற்றும் இலகு ரக சரக்கு  வாகனங்களுக்கு ரூ.30,000 வரையிலும், கார்களுக்கு ரூ.1.50 லட்சம் வரையிலும்  மானியம் அறிவிக்கப்பட உள்ளது.

Tags : New Delhi , E vehicles, Delhi, AAm admin government
× RELATED பல இலக்குகளை தகர்க்கும் புதிய...