×

படுக்கை வசதிக்கு லஞ்சம், குடிநீர் கூட கிடையாது கலெக்டர் உத்தரவையே கண்டுகொள்ளாத தென்காசி அரசு மருத்துவமனை

*நிர்வாக குறைபாட்டால் நோயாளிகள் அவதி

தென்காசி : கொரோனா ஊரடங்கிலும் தென்காசி மருத்துவமனையில் நிர்வாகக் குறைபாட்டால் நோயாளிகள் அவதிப்படுவதாக சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டுகின்றனர்.  தென்காசி மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டோரை பாதுகாக்கவும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தென்காசி அரசு மருத்துவமனையில் நிர்வாகக் குறைபாட்டால் நோயாளிகள் அவதிப்படுவதாக குற்றச்சாட்டு பலமாக எழுந்துள்ளது.

கொரோனா தொற்றால் தீவிர பாதிப்பிற்குள்ளாகும் நபர்களுக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்கள் தென்காசி அரசு மருத்துவமனையில் முறையாக பராமரிக்கப்படவில்லை. இதன் காரணமாக 108 ஆம்புலன்ஸ் தீயில் எரிந்த சம்பவம் மக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.  அத்துடன் நோயாளிகளுக்கு படுக்கை  வசதி அளிக்க லஞ்சம் கேட்டது, கொரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு சரியாக குடிநீர் கூட வழங்கப்படாதது, பாத்ரூம்களில் குளிக்க தண்ணீர் தட்டுப்பாடு, ேநாயாளிகளுக்கு நேரத்திற்கு உணவு வழங்கப்படாதது உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளால் இங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகின்றனர்.

அத்துடன் கொரோனாவை காரணம் காட்டி சாதாரண நோய்களுக்குக் கூட முறையாக சிகிச்சை அளிக்க மறுப்பதாகவும், எலும்பு முறிவு சிகிச்சை முறையாக வழங்கப்படவில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பாக எலும்பு முறிவு சிகிச்சைக்கு வருவோரை ஆரம்ப கட்ட மருத்துவம் கூட வழங்காமல் உடனடியாக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதாக  பொதுமக்கள் சாடியுள்ளனர். தென்காசி கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் பலமுறை மருத்துவமனைக்கு நேரடியாக சாதாரண நபர் போன்று சென்று சுட்டிக்காட்டிய பல்வேறு குறைகள் கூட இன்னும் நிவர்த்தி செய்யப்படவில்லை.

 இம்மாவட்ட மக்களைப் பொருத்தவரை தென்காசி அரசு மருத்துவமனை மீது நாளுக்கு நாள் நம்பிக்கை குறைந்து வரும் நிலையில் இதுபோன்ற குறைகளை மறைப்பதற்காக மருத்துவமனையின் சில டாக்டர்கள் சுய விளம்பரம் தேடும் நிகழ்வு குறித்து பல்வேறு தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்துள்ளனர்.

Tags : Tenkasi Government Hospital ,bed facilities , Tenkasi,Government Hospital,Patients suffer, corona virus
× RELATED சித்த மருத்துவக் கல்லூரி...